×

தேனி, சேலம் நிர்வாகிகளின் காலை வாரும் வேலைகளால் இலை கட்சியே காணாமல் போன கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மேகத்தை பார்த்து மயிலாடுவதை போல… சேலம்காரரை பார்த்து அவரது ஆதரவாளர்கள் போடும் ஆட்டத்தால், தேனிக்காரர்களின் நிர்வாகிகளின் நிலை அந்தரத்தில் இருக்கிறதாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘கடலோர மாவட்டத்தில் இருந்து புதிதாக உதயமான மாவட்டத்தில், இலைகட்சி மாஜி அமைச்சர் ஜெயபாலனவரின் ஆதராவளரும், தேனிகாரர் அணியில் இருப்பவருமான முருகநாதன் பெயர் கொண்டவருக்கு கடந்தாண்டு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இவர் பொறுப்பேற்றதில் இருந்து கட்சிப்பணிகள் ராக்கெட் வேகத்தில் இருந்ததாம். இதனால் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பக்கம் சாய்ந்தனர். தனக்குதான் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்ற கனவில் இருந்த சேலம்காரர் அணியை சேர்ந்த மாஜி எம்எல்ஏ தங்கமானராஜ் உள்ளடி வேலையில் இறங்கினார். இதனால் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் முருகநாதன் பெயர் கொண்டவரின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். எதிர்பார்த்த மாவட்ட செயலாளர் பதவி கிடைத்த வெற்றிக்களிப்பில் தங்கமானராஜ் முனைப்புடன் இருந்தார். சட்டமன்ற தேர்தலின்போது, மாஜி மாவட்ட செயலாளரான முருகநாதன் பெயர் கொண்டவருக்கு சீட் கிடைக்காமல், அதற்கான உள்ளடி வேலையை மாவட்ட செயலாளர் மாஜி எம்எல்ஏ தங்கமானராஜி பார்த்தாராம். இதனால், புதிதாக உதயமான மாவட்ட சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சியான மாம்பழ கட்சிக்கு போனது. அதிர்ச்சிக்குள்ளான தேனி ஆதரவாளர்கள், சட்டமன்ற தேர்தலில் உள்ளடி வேலை பார்த்ததால் மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் இலைகட்சி மண்ணை கவ்வியது. தொகுதியில் 2 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்த மாவட்ட செயலாளரான தங்கமானராஜியும் 3வது முறையாகவும் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்க முடிய வில்லையாம். இதனால் ‘அப்சட்’ ஆன தங்கமானராஜியும் தோல்வியடைந்ததற்கு காரணமே தேனிகாரர்கள் ஆதரவாளர்கள் தான் என மாஜி அமைச்சரான மணியானவரிடம் அழுது புலம்பினாராம். தேர்தல் தோல்வி எதிரொலியால் தேனிகாரர் ஆதரவாளர்களின் முருகநாதன் பெயர் கொண்டவரின் பேரவை செயலாளர், 4 ஒன்றிய, 2 நகர செயலாளர்கள் பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டதாம்.. இதனால் கோபத்தில் உச்ச கட்டத்துக்கு சென்ற தேனிக்காரரின் ஆதரவாளர்கள் அடுத்தது என்ன பண்ணலாம் என தற்போது ‘டீப்’ டிஸ்கஷனில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘அரசுக்கு சொந்தமான போலீஸ் ஸ்டேஷனை சொர்க்க பூமியாக்க கல்லா கட்ட முயன்றாராமே ஏட்டு…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஒரு போலீஸ் ஸ்டேஷனில் 3 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்கள், வேறு ஸ்டேஷனுக்கு மாற்றப்படுவது வழக்கம். ஆனால், மாங்கனி மாநகரில் 4 ஆண்டுகள் ஆன நிலையில் கூட இன்னும் யாரும் மாற்றப்படவில்லையாம். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அதிகாரிகள் இல்லாததே இதற்கு காரணமாம். இதை பயன்படுத்திக்கொண்ட சில காக்கிகள் தங்களால் முடிந்தவரையில் தேன் எடுக்கும் பணியை செய்து வருகிறார்களாம். ரவுடிகளை மாமா, மாப்ளேன்னு அழைக்கும் அளவுக்கு தோஸ்தாகி விட்டார்களாம். அவர்களிடம் இருந்து நல்ல பலனை அனுபவித்தும் வருகிறார்களாம். குறிப்பா ‘கரன்ட் பேப்பர்’ விசாரிக்கக் கூடிய போலீசாரின் காட்டில் அடைமழை பெய்யுதாம்.ஜெயில் இருக்கும் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் ஏட்டு ஒருவர், இருக்கையில் இருப்பதே இல்லையாம். ஸ்டேஷனை சொர்க்க பூமியா மாத்தப்போறேன்னு சபதம் போட்டிருக்காராம். முதற்கட்டமாக இன்ஸ்பெக்டர் ரூமுக்கு டைல்ஸ் போட்டாராம். இப்போ ஸ்டேஷன் முழுமைக்கும் டைல்ஸ் பதிக்கப்போறேன்று ஒரு லோடு டைல்ஸ்ச ஸ்டேஷனுக்கு முன்னாடி இறக்கியிருக்காராம். ஏற்கனவே, ரவுடிக்கிட்ட ஸ்டேஷனுக்கு வெள்ளையடிக்க மாமூல் வாங்கி சிக்கிய சம்பவம் அங்கிருந்த சில அதிகாரிகள் கண் முன்னே வந்துபோயிருக்கு. உஷாரான அதிகாரிகள், யாருகிட்ட வாங்கிய பணத்தில் இருந்து டைல்ஸ் போடுறீங்கன்னு கேள்வி கேட்டிருக்காங்க. சொந்த பணத்துல டைல்ஸ் போடுறேன்னு பொய் சொல்ல முடியாது. இந்த கொஸ்டீனை எதிர்பார்க்காத அந்த சீனியர் ஏட்டு அதிர்ச்சியாகிட்டாராம். பல லட்சத்துக்கு ஸ்டேசனுக்கு டைல்ஸ் வாங்கியவரு, அவரது வீட்டுக்கு லோடை இறக்காமலா இருப்பாரு… தேன் எடுக்கிறவன் புறங்கையை கண்டுக்காமலா இருப்பான்னு நேர்மையான காக்கிகள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘வட்டார வளர்ச்சி அலுவலகமா கட்சிக்காரங்க அலுவலகமா என்று நினைக்கும் அளவுக்கு, எங்க பார்த்தாலும் கட்சிக்காரங்களா தெரியுறாங்களாமே…’’ என்று சிரித்து கொண்டே கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பக்கத்துல ஆலம் காயம் ஊராட்சி ஒன்றியம் இருக்குது. இந்த ஒன்றியத்துல கடந்த சில மாதங்கள்லயே 3 வட்டார வளர்ச்சி அலுவலருங்க டிரான்ஸ்பர் ஆகி போய்ட்டாங்களாம். அதுக்கு காரணம், அந்த ஒன்றியத்துல அரசியல் கட்சிக்காரங்க புகுந்து விளையாடுற, விளையாட்டுத்தானாம். அரசியல் கட்சிக்காரங்க, அந்த ஊராட்சி ஒன்றியத்துல என் சொந்தகாரனுக்குத்தான் சாலை போடுறதுக்கு, கழிவறை கட்டுறதுக்குன்னு எதுக்கா இருந்தாலும் டெண்டர் கொடுக்கணும், எனக்கு தெரியாம எந்த வேலையும் நடக்க கூடாதுன்னு ஸட்ரிட்டா ஆர்டர்போடுறாங்களாம். இப்படியே ஒவ்வொரு கட்சியில இருந்தும், அந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு போய்ட்டு, வட்டார வளர்ச்சி அலுவலருங்கள மிரட்டாம, மிரட்டுறாங்களாம்.  இதனால, அந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு மட்டும் என்ன டிரான்ஸ்பர் பண்ணிடாதீங்கன்னு புலம்புறாங்களாம். இப்படி ஒட்டுமொத்த அரசியல் கட்சிக்களோட தலையீட்டால, ஆலம் காயம் ஊராட்சி ஒன்றியத்துல எந்த வேலையும் நடக்குறதில்லையாம். இதுக்கு மத்தியில கான்ட்ராக்டருகங்களும் அவங்க பங்குக்கு மோதி பாக்குறாங்களாம். இதனால யாருக்கு என்ன வேலைய கொடுக்குறதுன்னு தெரியாம அதிகாரிங்க விழிபிதுங்கி நிக்குறாங்களாம். இதுக்கு யாருதான் ஒரு முடிவு கட்டுவாங்களோ தெரியலையேன்னு புலம்புறாங்களாம் அதிகாரிங்க…’’ என்றார் விக்கியானந்தா. …

The post தேனி, சேலம் நிர்வாகிகளின் காலை வாரும் வேலைகளால் இலை கட்சியே காணாமல் போன கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : honey ,salem ,wiki ,yananda ,Salemgarh ,Leaf Party ,
× RELATED தேனியில் இருந்து சீருடை அணிந்து...