×

திருவாரூரில் 7வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் அரவைக்கு நெல்மூட்டைகள் அனுப்பும் பணி பாதிப்பு

திருவாரூர், மே 16: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 7வது நாளாக  லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொது விநியோக திட்டத்தின் அரவைக்காக நெல் மூட்டைகள் எடுத்து செல்லும் பணி பாதிக்கப்பட்டது.  தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யபட்டு வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவுபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்கம் மூலம் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான குடோன்கள் மற்றும் அரவைக்காக நவீன அரிசி ஆலைகள் போன்றவற்றிற்கு எடுத்துச் செல்லும் பணி  நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி  வெளி மாவட்டங்களுக்கு ரயில்கள் மூலம் தினந்தோறும் நெல் மற்றும் அரிசிகளை அனுப்பும் பணியிலும் இந்த லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து  நவீன அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் லாரி உரிமையாளர்களுக்கும்,  அரிசி ஆலை உரிமையாளர்களுக்குமிடையே இருந்து வரும் வாடகை பிரச்சனை காரணமாக லாரி உரிமையாளர்கள்  சங்கத்தினர் கடந்த 9ம் தேதி முதல் லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7வது நாளாக வேலை நிறுத்தம் காரணமாக லாரிகள் இயங்காததால் மாவட்டத்தில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு  நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அரவைக்காக நெல் மூட்டைகள் எடுத்து செல்லும் பணி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள லாரிகள் மூலம் நெல் மூட்டைகளை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : lorry strike ,Thiruvarur ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...