×

கொளுத்தும் அக்னி நட்சத்திரம் முத்துப்பேட்டையில் குடிநீருக்காக திண்டாடும் மக்கள் ஆங்காங்கே குடிநீர் டேங்க் அமைக்க கோரிக்கை

முத்துப்பேட்டை, மே 16: திருவாரூர் மாவட்டம்,  முத்துப்பேட்டையை ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் வெயிலால் மக்கள் குடிநீருக்காக திண்டாடுகின்றனர் அதனால் ஆங்காங்கே மக்கள் கூடும் இடத்தில்  குடிநீர் டேங் வைக்க வர்த்தகக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 108 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. இதில் இந்தாண்டு பருவமழை பெய்யாததற்கு காரணம் அதிகளவில் மரங்கள் வெட்டப்பட்டதுதான் முக்கிய காரணம் என்று ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் அக்னி நட்சத்திரதிரம் என்னும் கத்திரி வெயில் கடந்த 4ம்தேதி தொடங்கி 11நாட்கள் ஆகியுள்ளது. 19 நாட்கள் அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் திருவாரூர் மாவட்டத்தில் 107 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டை பகுதியில் 80 சதவித மரங்கள் அடியோடு சாய்ந்து இல்லாததால் இந்தாண்டு இப்பகுதியில் பருவமழை இல்லை. இதனால் மேலும் இப்பகுதியில் கடும் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முத்துப்பேட்டை பகுதியில் வருடந்தோறும் இதுபோன்று கோடை நேரத்தில் அரசியல் கட்சியினர் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால் இந்த தண்ணீர் பந்தல்கள் இல்லை. அதனால் சுற்றுப் பகுதியிலிருந்து முத்துப்பேட்டைக்கு வரும் மக்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க குடிநீர் கிடைக்காமல் பெரிதும் தவித்து வருகின்றனர்.  தற்பொழுது பிளாஸ்டிக் ஒழிப்பால் பாக்கெட் தண்ணீருக்கு வேலை இல்லாததால் பாட்டில் தண்ணீரை வாங்கி குடிக்க வசதி இல்லாமல் ஏழை எளிய மக்கள் முக்கியமாக குடிநீர் கிடைக்காமல் அவதிப் பட்டு வருகின்றனர். இதனால் அரசு சார்பில் முத்துப்பேட்டையில் பல்வேறு இடங்களில் மக்களின் வசதிக்கு குடிநீர் பந்தல் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை வர்த்தகக் கழகம் சார்பில் அதன் தலைவர் மெட்ரோ மாலிக் தலைமையில் நிர்வாகிகள் அசோகன், விவேக், நவாஸ்கான், தியாகு, பெரியக்கடை தெரு வர்த்தகக் கழக பொருளாளர் வெற்றி உட்பட நிர்வாகிகள் திரண்டு  முத்துப்பேட்டை பேரூராட்சியில் மனு ஒன்று கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை பகுதியில் கடுமையான வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதுடன் கடைதெருவுக்கு வரும் மக்கள் தங்களது தாகத்தை தீர்க்க குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதனால் முத்துப்பேட்டை புதிய பழைய பேருந்து நிலையங்கள், ஆசாத்நகர், காணா ஓட்டல் அருகில், பேரூராட்சி எதிர்புறம், பங்களா வாசல், அரசு மருத்துவமனை வாசல் ஆகிய பகுதியில் குடிநீர் டேங் அமைத்து தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்து தர வேண்டும். மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி இரண்டாம் நிலை அலுவலர் செல்வகுமார், “ இன்னும் இரண்டு நாளில் அப்பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.

Tags : Agni ,town ,
× RELATED பொதுமக்கள் பாராட்டு கறம்பக்குடி...