லெட்சுமாங்குடி - மன்னார்குடி இடையே ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி ஒரு வழிப்பாதையால் வாகன ஓட்டிகள் அவதி

கூத்தாநல்லூர், மே 16: லெட்சுமாங்குடியில் இருந்து மன்னார்குடி செல்லும் பிரதான சாலையில் பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் வாகனங்கள் ஒரு வழியாக செல்வதால் பாலப்பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரிலிருந்து  மன்னார்குடி மார்க்கம் செல்லும் லெட்சுமாங்குடி - மன்னார்குடி சாலையில் சாலைப்பணிகள் கடந்த ஒருமாதங்களுக்கு மேலாக  நடைபெற்று வருகின்றன. இதில் கோரையாற்றுப்பாலத்திலிருந்து சவளக்காரன் வரையிலான சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலையின் இடையிடையே உள்ள நீர்வழி பாலங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இந்த நீர்நிலை வழி பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலை துறை சாலையின் வழிகளை மறிக்காமல் ஒருபக்கம் வாகனப்போக்குவரத்தை அனுமதித்து மறுபக்கம் பாலப்பணிகள் நடந்து வருகிறது. இதனால்  பல நேரங்களில் வாகன போக்குவரத்து தடை ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
கோரையாற்றின் அருகே வ.உ.சி.நகரில் தற்போது நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகளால் சாலையின் ஒருபக்கம் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் வாகனங்கள் செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களுக்கு அதிக எரிபொருட்செலவும் ஏற்படுகிறது. எனவே ஆமை வேகத்தில் நடக்கும் பாலப்பணியை விரைந்து முடித்து  போக்குவரத்தை சீராக்க வழிவகைகளை செய்ய வேண்டும் என அரசுக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Lethamangudi - Mannargudi Tunnel ,
× RELATED வேதை சாலை சீனிவாசராவ் ஆர்ச் அருகே...