×

பந்தநல்லூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகம் முற்றுகை பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம், மே 16: பந்தநல்லூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த கிராம பகுதியில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வந்தது. மேலும் குறைந்த மின்னழுத்தம் பிரச்னையால் மின்சாதன பொருட்கள் பழுதானது. இதனால் விவசாயிகள் தாங்கள் பயிரிடப்பட்டுள்ள கோடை நெற்பயிர்களுக்கு பம்புசெட் உதவியுடன் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்கள் தண்ணீரின்றி வாடும் அவலம் ஏற்பட்டுள்ளது. தொடர் மின்தடையால் வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகம், கும்பகோணம் மின்வாரிய தலைமை அலுவலகம், கும்பகோணம் ஆர்டிஓ, தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பந்தநல்லூர் பகுதியில் குறைந்த மின்னழுத்தத்தில் மின்சப்ளை இருப்பதோடு பல நேரங்களில் நீண்டநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 30 கிராம மக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள்  ஒன்றிணைந்து பந்தநல்லூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். உழவர் பேரியக்க மாநில தலைவர்  ஆலயமணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் கலியமூர்த்தி, விவசாய சங்க தலைவர் சங்கர், செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சுப்பிரமணியபிள்ளை, வர்த்தக சங்க தலைவர் பிச்சுமணி, பாஜ மாவட்ட பொறுப்பாளர் ராதாமற்றும் பலர் பங்கேற்றனர். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Electricity Electricity Bachelor Engineer ,area ,Pathanallur ,office blockade ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி