×

உடைப்பு ஏற்பட்டு 2 ஆண்டாகியும் பழையாறு துறைமுக தளத்தை சரி செய்யாதது ஏன்? பொதுமக்கள் கேள்வி

கொள்ளிடம், மே 16: கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுக படகு அணையும் தளத்தில் உடைப்பு ஏற்பட்டு 2 வருடங்களுக்கும் மேலாகியும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுமக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் மீன் பிடி துறைமுகம் உள்ளது. மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக உள்ள இந்த துறைமுகத்தில் 350, விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டுப்படகுகள் மூலம் தினந்தோறும் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். மேலும் இத்துறைமுகத்தில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளார்கள் வந்து பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் படகு அணையும் தளம் புதியதாக உலக வங்கி நிதிஉதவியுடன் மேம்படுத்தப்பட்டு 4 வருடங்கள் ஆகிறது. ஆனால் கட்டப்பட்டு இரண்டே வருடங்களில் துறைமுக, படகு அணையும் தளத்தில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் போது தடுமாறி கிழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் தரமற்ற முறையில் படகு அணையும் தளம் கட்டப்பட்டுள்ளதால் கடல்நீரை ஒட்டியுள்ள பகுதியில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே படகு அணையும் தளத்தை வலிவுள்ளதாகவும் முறையாக மீண்டும் புதியதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட திமுக மீனவரணி துணை அமைப்பாளர் பொன்னின்செல்வன்  மீன்பிடி துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளகோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது