×

தாதையகுண்டா கோயில் திருவிழா நிறைவு நாளில் விஸ்வரூப தரிசனத்தில் காட்சியளித்த கங்கையம்மன்

* மண் எடுப்பதில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு * திருப்பதியில் பரபரப்பு

திருப்பதி, மே 16: திருப்பதி தாதையகுண்டா கங்கையம்மன் கோயில் திருவிழாவின் நிறைவு நாளில் விஸ்வரூப தரிசனத்தில் கங்கையம்மன் காட்சியளித்தார். தொடர்ந்து மண் எடுப்பதில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு மக்களை வதைத்து வந்த அசுரனை தாதையகுண்டா கங்கையம்மன் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வேடமிட்டு வந்து அழித்ததாக பக்தர்களிடையே நம்பிக்கையாக உள்ளது. இதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தாதையகுண்டா கங்கையம்மன் கோயிலில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. திருவிழாவின் முதல்நாளன்று அதிகாலை அவிலாலா ஏரியில் இருந்து மஞ்சள், குங்குமம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து கோயிலில் உள்ள அம்மனின் மறுவடிவமாக கூறப்படும் கல்தூணிற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மஞ்சள், குங்குமம் வைத்து புதிய புடவைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்து பைராகி வேடம், பண்ட வேடம், தோட்டி வேடம், துரை வேடம், மாதங்கி வேடம், 13ம் தேதி சுனப்பகுண்டலு வேடத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றுமுன்தினம் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பல்வேறு வேடமணிந்து வந்து தீச்சட்டி சுமந்தனர். இந்நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று சிறப்பு வாய்ந்த விஸ்வரூப தரிசனத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை களிமண்ணால் அம்மனின் பிரமாண்டமான சிரசு வடிவமைக்கப்பட்டது. பின்னர் அம்மனின் கண் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்தில் கங்கையம்மன் பக்தர்களுக்கு காட்சியிளத்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சில நிமிடங்களிலேயே அம்மனின் சிரசு கலைக்கப்பட்டு அந்த மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த மண்ணை பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.


அம்மன் மண்ணின் சிறப்பு

அம்மனின் சிரசு கலைக்கப்பட்டு கிடைக்கும் மண்ணை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் சகல தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் நலமாக வாழலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே இருந்து வருகிறது. இதனால் மண்ணை எடுக்க ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

Tags : Gangai Amman ,Vishwaroopa Darshan ,festival ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...