×

தமிழகம் முழுவதும் மலிவு விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் வங்கி வரைவோலை கொடுத்து மாதக்கணக்கில் காத்திருப்பு

வேலூர், மே 16: தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் வங்கி வரைவோலை சமர்ப்பித்தும் உரிய காலத்தில் மலிவு விலை சிமென்ட் கிடைக்காமல் கட்டிடப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சிமென்ட் விலை ஏற்றத்தால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சலுகை விலையில் சிமென்ட் விற்பனை செய்யும் வகையில் அம்மா சிமென்ட் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. தனியார் சிமென்ட் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சிமென்ட் மூட்டைகள் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 470 கிடங்குகளில் இருப்பு வைத்து மூட்டை ஒன்று 190க்கு விற்பனை செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோர் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிகபட்சமாக 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமென்ட் பெற்றுக் கொள்ளலாம். சிமென்ட் வாங்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட திட்ட வரைபடத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை அலுவலர், ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர், ஊராட்சி ஒன்றிய ஆய்வாளரின் சான்றிதழையோ சமர்ப்பிக்க வேண்டும். அரசின் மலிவு விலை சிமென்ட் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் 220 கிடங்குகள், ஊரக வளர்ச்சித்துறையின் 250 கிடங்குகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக திட்டத்தின் பெயரிலேயே வங்கி வரைவோலை எடுத்து சிமென்ட் மூட்டைகளை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், வங்கி வரைவோலை எடுத்து சமர்ப்பித்து 3 முதல் 5 மாதங்கள் வரை சிமென்ட் கிடைக்காமல் அவதியுறுவதாக புகார் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் என பல இடங்களிலும் வீடு கட்டவும், கட்டிடம் பழுது பார்க்கவும், வீடு விரிவாக்கம் செய்யவும் வங்கி வரைவோலை எடுத்து சமர்ப்பித்தவர்கள் 5 மாதங்களாக சிமென்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக அவர்கள் சம்பந்தப்பட்ட கிடங்குகளில் கேட்டபோது, சரியான பதில் கிடைக்கவில்லை என்றும், இந்த நிலை மாநிலம் முழுவதும் பரவலாக நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வேலூர் சிவில் சப்ளைஸ் குடோன் அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘ஏற்கனவே ஆர்டர் கொடுத்த தனியார் சிமென்ட் நிறுவனம் சிமென்ட் சப்ளை செய்யாததால், வேறு நிறுவனத்துக்கு ஆர்டர் மாற்றப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் சிமென்ட் சப்ளை செய்யப்பட்டுவிடும். சிமென்ட் வந்ததும் வங்கி வரைவோலை கொடுத்தவர்களுக்கு வழங்கப்படும். அதேபோல் குடியாத்தம், ஆம்பூர், காவேரிப்பாக்கம், திருப்பத்தூர் குடோன்களிலும் சிமென்ட் வந்துவிடும். மாநிலம் முழுக்க இப்பிரச்னை இருப்பதாக கூற முடியாது’ என்றனர்.

Tags : Tamilnad ,
× RELATED பர்கூர் அருகே நிலச்சரிவால்...