×

சின்னாறு வனத்துறை விடுதியில் அதிக கட்டணம் வசூல்

உடுமலை,  மே 15:   கோடை காலங்களில் மலைவாச தலங்களுக்கு சென்று  தங்குவதை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.  வனத்துறை சார்பில், பல்வேறு இடங்களில் சுற்றுலா விடுதிகள்  கட்டப்பட்டுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப்பில்  ஏராளமான விடுதிகள் மற்றும் மர வீடுகள் உள்ளன. அதேபோல், உடுமலை  வனச்சரகத்துக்குட்பட்ட சின்னாறிலும் வனத்துறை விடுதி உள்ளது. உடுமலையில்  இருந்து மூணாறு செல்லும் சாலையில், சின்னாறு செக்போஸ்ட் அருகே இந்த விடுதி  உள்ளது.

சின்னாறு வனத்தில் டிரெக்கிங் (மலையேற்றம்) செய்யும் சுற்றுலா  பயணிகள் இரவில் இந்த விடுதியில் தங்குகின்றனர். இதற்காக ஆன்-லைனில்  முன்பதிவு செய்யப்படுகிறது. கட்டணம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.1600 வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி  அடைந்து வருகின்றனர். நான்கு சுவர்களை கொண்ட அறையை தவிர வேறு எந்த வசதியும் இல்லை என  குற்றம்சாட்டுகின்றனர்.

 சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூறியதாவது: இந்த  கோடை விடுமுறையில் வனப்பகுதியில் தங்கும் ஆசையுடன், ஆன்-லைன் மூலம்  சின்னாறு விடுதியில் தங்க முன்பதிவு செய்தோம். இங்கு வந்து பார்த்தால் எந்த  வசதியும் இல்லை.  ஆனால் சமையல் செய்ய உபகரணங்களோ, சமையல்காரர் யாரும்  இல்லை. நகர பகுதிக்கு சென்றுதான் பார்சல் வாங்கி வர வேண்டி உள்ளது. மேலும் வனப்பகுதி  காய்ந்து கிடக்கிறது. எந்த வன விலங்குகளையும் அப்பகுதியில் காண முடிவதில்லை.  

சின்னாறு  வறண்டு பாறைகளாக காட்சி அளிக்கிறது. இதனால் பரிசல் சவாரி  முடக்கப்பட்டுள்ளது. இங்கு வருவதால் எந்த பயனும் இல்லை. ஆன்-லைன் விளம்பரத்தை  பார்த்து ஏமாந்து விட்டோம். இதற்கு ரூ.1600 கட்டணம் வசூலிப்பது  அநியாயம். அறை முன்பதிவை ரத்து செய்தால், கட்டணத்தையும் திரும்ப தருவதில்லை. மேலும் அதிக  சுற்றுலா பயணிகளை கவர வேண்டுமானால், அடிப்படை வசதிகளை மேம்படுத்த  வேண்டும். விடுதி கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Chinnar Forest Resort ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு