×

நாடு முழுவதும் 21 லட்சம் பெண்களுக்கு வலிப்பு நோய் பாதிப்பு

கோவை, மே 15: நாடு முழுவதும் ஆண்டுக்கு 21 லட்சம் பெண்களுக்கு வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், அதில் 15 முதல் 49 வயதிற்குட்பட்ட பெண்கள் 52 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நரம்பியல் மருத்துவர்கள் தெரிவித்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் கோவை தாஜ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல்கேர் மருத்துவமனை நரம்பியல் பிரிவு மருத்துவர் விஜயன், கே.ஜி.மருத்துவமனை குழந்தைகள் நரம்பியல் பிரிவு மருத்துவர் ராமகிருஷ்ணன், அபாட் இணை மருத்துவ இயக்குனர் கரண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அபாட் இணை மருத்துவ இயக்குனர் கரண்குமார் பேசுகையில், வலிப்பு நோய் குறித்த வதந்திகளும்,பயங்களும் காலம் காலமாக மக்களிடையே இருந்து வருகிறது. உலக அளவில் ஆண்டுக்கு  7 கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கபடுகின்றனர், இந்தியாவில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது. இவர்களில் 80 சதவீதம் பேர் மருத்துவ சிகிச்சைகள் எடுப்பதில்லை. வலிப்பு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து ,சரியான முறையில் சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் வலிப்பு நோயின் பாதிப்புகளை குறைக்கமுடியும் என்றார்.

ராயல்கேர் மருத்துவமனை நரம்பியல் பிரிவு மருத்துவர் விஜயன் பேசுகையில், இந்தியாவில் 21 லட்சம்  பெண்களுக்கு வலிப்பு நோய் உள்ளது. இதில் 15 முதல் 49 வயதிற்குட்பட்டவர்கள் 52 சதவீதம் பேர் உள்ளனர். மாதவிடாய் சுழற்சி காலத்திலும், கர்ப்பதடை மாத்திரைகள் பயன்படுத்துவதாலும், கருவுறுதலின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் திருமணம், குழந்தைபேறு குறித்த பல்வேறு தவறான புரிதல்கள் சமூகத்தில் நிலவுகிறது. வலிப்பு நோய் பாதிப்புள்ள பெண்களில் 98% பேருக்கு எந்த பாதிப்புமின்றி குழந்தைபேறு நடந்துள்ளது. முறையான மருத்துவ சிகிச்சைகளை எடுத்து வந்தாலே வலிப்பு நோயிலுருந்து முழுமையாக குணமடையலாம் என்றார்.

கே.ஜி.மருத்துவமனை குழந்தைகள் நரம்பியல் பிரிவு மருத்துவர் ராமகிருஷ்ணன் பேசுகையில், வலிப்பு நோய் என்பது மனநோய் அல்ல, வலிப்பு நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சிக்கல்கள் இன்றும் உள்ளது. அவர்களும் மற்ற குழந்தைகளை போலவே திறமையானவர்கள் தான். கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், எழுத்தாளர் அகதா கிருஸ்டி, தத்துவ ஞானி சாக்ரடீஸ்,அலெக்ஸாண்டர் போன்ற சாதனையாளர்களும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களே. பள்ளிகளில் வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வும், முதலுதவி நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றார்.

Tags : women ,country ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...