×

போக்குவரத்து போலீசார் இல்லாததால் முக்கியச் சந்திப்புகளில் போக்குவரத்து முடக்கம் விருதுநகரில் வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர், மே 15: விருதுநகரில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் இல்லாததால், போக்குவரத்து முடங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விருதுநகரில் மெயின் பஜார், மதுரை ரோடு, சாத்தூர் ரோடு, சிவகாசி ரோடு, அருப்புக்கோட்டை சாலைகளில் விதிமுறை மீறி, நிறுத்தப்பட்ட வாகனங்களை கடந்த ஏப்.மாதம் வரை போக்குவரத்து போலீசாரால் முறைப்படுத்தி வந்தனர். இதனால், சாலையோரங்களில், கடைகளின் முன்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவது தடுக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் நடைமுறையால் போக்குவரத்து துணை ஆய்வாளர் முதல் போலீசார் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த மாற்றத்திற்கு பிறகு வந்த துணைஆய்வாளர் நகர் பகுதியில் நின்று போக்குவரத்து முறைப்படுத்தும் பணியை மேற்கொள்ளவில்லை.
இதனால் நகரில் மெயின்பஜார், வடக்கு ரதவீதி, தேசபந்து மைதானம், தெற்கு ரதவீதி, மதுரை ரோடு, சாத்தூர் ரோடு, பழைய அருப்புக்கோட்டை ரோடு, சிவகாசி ரோடு, நகராட்சி சாலை என அனைத்து ரோடுகளிலும் டூவீலர்கள், லோடு ஆட்டோ, கார்கள், வேன்கள், லாரிகளை விதிமுறை மீறி தங்கள் இஷ்டத்திற்கு நிறுத்தி எடுக்கின்றனர்.

மேலும், போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக தேசபந்து மைதானத்தில் பணி அமர்த்தப்படும் போலீசார், மாரியம்மன்கோவில் எதிர்புற போலீஸ் அவுட் போஸ்ட் பின்பகுதியில் உள்ள விநாயகர்கோவில் திண்ணையில் அமர்ந்து செல்போனில் பேசி அரட்டை அடிப்பதாக கூறப்படுகிறது. இதனால்,
தேசபந்து மைதானம் மற்றும் வடக்கு ரதவீதியில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

மேலும் காரநேசன், ராமமூர்த்தி ரோடு மேம்பாலம், எம்ஜிஆர் சிலை, மீனாம்பிகை பங்களா, அல்லம்பட்டி முக்கு ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்படுவதில்லை. இந்த இடங்களில் தினசரி தனியார் பஸ்கள், அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள் இஷ்டத்திற்கு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

நகரின் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டிய போக்குவரத்து போலீஸ் துணைஆய்வாளர் தனியார் ஓட்டல், நிறுவனங்களுக்கு ஆதரவாக நகரில் கார் நிறுத்துமிடங்களை அமைக்கும் வேலைகளில் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதனால், நகரின் போக்குவரத்தை முறைப்படுத்துவது கேள்விக்குறியாகி வருகிறது.

இதை கண்காணிக்க வேண்டிய விருதுநகர் துணைக்கண்காணிப்பாளர் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதால், விருதுநகர் வீதிகள் அனைத்தும் இடியாப்ப சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. இதனால், நகரின் சட்ட ஒழுங்கும் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : junctions ,
× RELATED சென்னையில் அமலானது வேக கட்டுப்பாடு...