×

ரயில்வே மேம்பாலம் கீழ் ஆக்கிரமிப்பு மரக்கடைகள் அகற்றம் விருதுநகரில் நகராட்சி நிர்வாகம் அதிரடி

விருதுநகர், மே 15: விருதுநகரில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மரக்கடைகளை, நகராட்சி நிர்வாகம் நேற்று அகற்றியது. மீட்கப்பட்ட நகராட்சி இடத்தை முட்கம்பி வேலியிட்டு பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகரில் உள்ள அருப்புக்கோட்டை ரோடு ரயில்வே மேம்பாலம் 2003ல் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 24 மணி நேரமும் கனரக வாகனங்கள், பேருந்துகள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் தினசரி பாலம் வழியாகச் சென்று வருகின்றன.  

இந்த பாலத்தின் கீழ்பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து. மரக்கடைகள் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தன. இந்த கடைகளில் பழைய கட்டிடங்களின் ஜன்னல், கதவு, நிலைகள் வியாபாரமும், புதிய மரங்களால் செய்யப்பட்ட நிலை, கதவு, ஜன்னல்கள் மற்றும் மரச்சாமன்கள் விற்பனை நடைபெற்றது. மரக்கடைகள் இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற வகையில் திறந்த நிலையில் இருந்தன. சில அடைக்கப்பட்ட பகுதிகளில் சமூக விரோத செயல்கள் இரவு நேரங்களில் நடைபெற்று வந்தன. பிரச்னைகள் ஏற்படும்போது சமூக விரோதிகளால் மரக்கடைகளுக்கு தீங்கு செய்யும் நோக்கில், தீ வைத்தால் பாலத்தின் அடியில் குவிந்து கிடக்கும் மரங்கள் எரிந்தால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி விடும்.

அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பாக பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என கடந்த ஏப்.22ல் நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதில் நகராட்சி ஆணையரும், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாரும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என உறுதி அளித்திருந்தனர்.

இதன் எதிரொலியாக நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தலைமையில் அதிகாரிகள் அருப்புக்கோட்டை ரோடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பழைய மரக்கடைகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான இடத்தை யாரும் ஆக்கிரமிக்காத வகையில், முட்கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Municipal Administration Action ,Virudhunagar ,
× RELATED மாவட்டத்தின் பெருமைகளை...