அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்தில் பாதுகாப்பின்றி கண்டமாகும் டூவீலர்கள் போலீசார் கவனிப்பார்களா?

அருப்புக்கோட்டை, மே 15: அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்தில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பாதுகாப்பின்றி கண்டமாகின்றன. எனவே, கோரப்படாத வாகனங்களை ஏலம் விடவும், அதுவரை பாதுகாப்பாக வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த திருட்டுச் சம்பவங்கள், விபத்துக்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள்   போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு டவுன் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் விலை உயர்ந்தது. வழக்குகளை விரைந்து முடிக்காமல் இருப்பதாலும், வழக்கு முடிந்தும் உரியவர்களிடம் ஒப்படைக்காமலும் திறந்த வெளியில் வாகனங்களை வைத்துள்ளனர். ஒரு சில வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை தராமல் பொதுமக்கள் இருப்பதால்  டவுன் காவல்நிலையம் பின்புறம் திறந்த வெளியில் கேட்பாரற்று கிடைக்கிறது.  

இதனால், வாகனங்கள் மழைக்கு நனைந்தும், வெயிலுக்கு காய்ந்தும் துருப்பிடித்து சேதமடைந்து வருகிறது. இதே நிலைதான் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட டூவீலர்கள் முறையான ஆவணங்கள் இன்றி உள்ளன. பொதுப்பணித்துறையில் செயல்படக்கூடிய மெக்கானிக்கல் பிரிவினர் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் இதுபோன்று இருக்கும் வாகனங்களை கணக்கிட்டு வருவாய்த்துறை மூலம் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதுவரை காவல்நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை பாதுகாப்பான முறையில் வைக்க, மாவட்ட காவல்துறை நிர்வாகம் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED தமிழகத்தில் 5 ஆண்டுகளில் எத்தனை...