×

போலீஸ் வேட்டையில் 5 பேர் சிக்கினர் அவரை விளைச்சல் அமோகம் கோடைகால நோய்களில் இருந்து கால்நடைகளைக் காப்பது எப்படி?

உத்தமபாளையம், மே 15: கோடைக்காலத்தில் பரவும் நோய்களில் இருந்து கால்நடைகளை காப்பது பற்றி கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் முக்கியமாக உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கோட்டத்தில் கால்நடை வளர்ப்பு தொழில் மிக முக்கியமானதாக உள்ளது. எனவே கால்நடைகளை காப்பது பற்றியும், அதனை பராமரித்தல் பற்றியும், தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மற்றும் உத்தமபாளையம் மண்டல இணை இயக்குநர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்பட்டால், நிழலில் தஞ்சம் அடைதல், அதிகமான தண்ணீர் பருகுதல், பசியின்மை, அதிகமான உமிழ்நீர் வடிதல், அதிக உடல்வெப்பநிலை, வாய் திறந்த நிலையில் சுவாசித்தல், நடுக்கம் ஏற்படுதல், கீழே விழுதல், போன்ற பாதிப்புகள் இருக்கலாம். கால்நடைகளை எப்போதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தொட்டி அமைத்து சுத்தமான குளிர்ந்த குடிநீர் வழங்க வேண்டும். மாடுகளை தண்ணீர் குடிக்க செய்யும்போது கலப்பு தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு தூவும்போது மாடுகளின் தண்ணீர் குடிக்கும் அளவு அதிகரிக்கும்.

வறண்ட வெப்பநிலை அதிகமாக உலவக்கூடிய பகுதிகளிலோ, தீவனப்பயிர்களிலோ, தீவனப்பயிர்கள் வளராத காலங்களிலோ கால்நடைகள் அதிகப்படியான உலர் மற்றும் நார்ச்சத்துக்களையும், குறைவாக செரிக்ககூடிய தீவனங்களையும் உட்கொள்கின்றன. இச்சூழலில் கால்நடைகள் அதிகமான தண்ணீரை பருகுகின்றன. இதுபோன்ற காலக்கட்டங்களில் உப்புகட்டி கால்நடை கொட்டகைகளில் கட்டி தொங்கவிடும்போது கால்நடைகள் அக்கட்டியை நாவினால் தடவும்போது கால்நடைகளில் தண்ணீர் பருகும் தன்மை அதிகரித்து உப்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கின்றன. எருமை மாடு வளர்ப்போர் குளியல் தொட்டிகளை உருவாக்கி மாடுகளை வெயில் காலங்களில் அத்தொட்டிகளில் விடும்போது வெப்ப அயர்ச்சியில் இருந்து எருமை மாடுகளை பாதுகாக்கலாம். இதனால் பால் உற்பத்தியும் பெருகும்.

கோடைக்காலங்களில் மாடுகளை காலை 6 மணிமுதல் 10 மணிவரையிலும், மாலையில் 3 மணி முதல் 7 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். கால்நடைகளின் தீவனத்தேவைகளை பூர்த்தி செய்ய மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தி, அசோலா பசுந்தீவன உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும். கால்நடைகளுக்கு கோடைக்காலத்தில் அவற்றின் தீவனங்களை பல பிரிவுகளாக பிரித்து இடைவெளிவிட்டு நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 வேளை தரவேண்டும்.

கறவை மாடுகளின் உடல் வெப்பத்தினை தணிப்பதற்கு குளிர்ந்த தண்ணீரை கால்நடைகளின் மேல் தெளித்தல், மாட்டுக்கொட்டகையின் கூரைக்கு மேல் தண்ணீர் தெளிப்பான் அமைத்தல் மூலமாக கோடைக்கால அயர்ச்சியை போக்கலாம். கொட்டகையை சுற்றி விரைவாக வளரும் நிழல்தரும் மரங்களை நடுவதால் கொட்டகை பகுதிகள் குளிமையாக இருக்கும். இவ்வாறு கூறினர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு