×

இளையான்குடி பகுதியில் பள்ளிகளில் தீத்தடுப்பு கருவிகள் இல்லை கேள்விக்குறியாகும் மாணவர்களின் பாதுகாப்பு

இளையான்குடி, மே 15:  இளையான்குடி பகுதி பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் இல்லாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. கோடை விடுமுறையில் அனைத்து பள்ளிகளிலும் தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இளையான்குடி ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் 64, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் 21, அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் 24, அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள் 8, அரசு தொடக்கப் பள்ளி 1, மேல்நிலைப் பள்ளிகள் 8, என மொத்தம் 126 பள்ளிகள் இயங்கி வருகிறது.

மேலும் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நர்சரிப் பள்ளிகளும் இயங்கி வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக தண்ணீர் வசதி, சிமெண்ட் கட்டிடம், தீ தடுப்பு கருவிகள், முதலுதவி வசதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்களுக்கும், அதனை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஆண்டுதோறும் உத்தரவு உள்ளது. ஆனால் இன்றுவரை இந்த பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் இல்லாதது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சில பள்ளிகளில் பல ஆண்டுகளுக்கும் மேலாக தீ தடுப்பு கருவிகளை புதுப்பிக்கவில்லை. அதனால் அதில் உள்ள வாயுக்கள் செயலற்று உள்ளது. சில நேரங்களில் பள்ளிகளில் தீயால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், இந்த செயலற்ற காலாவதியான தீ தடுப்பு கருவிகள் பயனற்றுபோகும் நிலை உள்ளது. அதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

வரும் ஜூன் மாத தொடக்கத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்க உள்ள நிலையில், பள்ளிகளில் முடங்கியுள்ள செயல்பாடுகள் அனைத்தையும், இந்த கோடை விடுமுறையில் நிவர்த்தி செய்ய மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு கருதி, இளையான்குடி பகுதி உட்பட சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தீ தடுப்பு உபகரணங்களை வைப்பதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் தரப்பில்  வழுவான கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், கும்பகோணம் பள்ளி தீ விபத்தை முன்னிட்டு,  மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளிகளுக்கு சில உத்தரவுகள் வந்தாலும், அதை முறையாக பின்பற்றுவதில்லை. கண்காணிக்கும் அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளனர். அதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.கோடை விடுமுறையை பயன்படுத்தி, பாதுகாப்பு உபகரணங்களை அனைத்து பள்ளிகளிலும் அமைக்க, கலெக்டர்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : junction areas ,
× RELATED இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதி நீர்நிலைகளில் சுகாதாரக்கேடு அபாயம்