×

காவிரி குடிநீர் கேட்டு தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தாராபுரம், மே 15:   தாராபுரம் அருகே வேங்கிபாளையம் கிராம மக்கள் காவிரி கூட்டு குடிநீர் கேட்டு  தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மரவாபாளையம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 100க்கு அதிகமான கூலி தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி சார்ந்த மரவாபாளையம் சூரியன் நல்லூர், குள்ளாய்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆழ்குழாய் குடிநீரில் துவர்ப்பு மற்றும் உப்புச்சுவை உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல் வலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இதனை குடிநீராக பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. எனவே தங்களுக்கு அமராவதி அல்லது காவிரி கூட்டு குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.  இந்நிலையில் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவன தலைவர் பவுத்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மரவாபாளையம் கிராம மக்கள் தாங்கள் உபயோகிக்கும் புளோரைடு அமில தண்ணீரை பாட்டில்களில் நிரப்பியும், காலி குடங்களுடன் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதையடுத்து வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்களிடம் மனுக்களை பெற்று கொண்டு விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மக்களை சமாதனம் செய்தார்.

 ஆனால் அடுத்த 15 நாட்களுக்குள் மரவாபாளையம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யாவிட்டால், அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்போம் என ஆதித் தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் பவுத்தன் கூறினார்.  மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் எங்கள் கிராம குடிநீரை ஆய்வு செய்த சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் புளோரைடு அமில தன்மை கொண்ட இந்த நிலத்தடி நீரை தொடர்ந்து உபயோகித்தால் உடல் எலும்புகள் தேய்மானம் அடைந்து, எலும்பு மஜ்ஜைகள் குறைந்து போகும், பற் சிததைவு நோய் ஏற்பட்டு 20 வயதை அடைந்த இளைஞர்கள் கூட பற்களை இழந்து விடுவார்கள், என கூறியுள்ளனர்.  குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 30 கி.மீ., தொலைவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இன்றளவும் புளோரைடு கலந்த அமில தண்ணீர் மட்டுமே ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து விநியோகம் செய்யப்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : siege ,Dharapuram Vattakiriyar ,Cauvery ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி