×

மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் தொல்லை

ஈரோடு, மே 15: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.  ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், வீடுகள், இறைச்சி கடைகள் ஆகியவற்றில் இருந்து சேரும் கழிவுகள் குப்பை தொட்டிகளிலும், சாலையோரங்களிலும் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கழிவுகளை தேடி ஒவ்வொரு வீதியிலும் 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகிறது. உணவிற்காக நாய்கள் சண்டை போட்டுக் கொள்வதுடன் சாலையின் குறுக்கே பாய்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.  சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், குழந்தைகளையும் நாய்கள் விரட்டி கடிக்கிறது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு வருபவர்களுக்கு விஷமுறிவு ஊசி போடப்படுகிறது.

ஈரோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நாய்க்கடி சிகிச்சைக்காக  தினமும் 10 முதல் 20 பேர் வரை வருகின்றனர். நாய்க்கடிக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் மருந்தின் விலை 450 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை உள்ளது. அரசு மருத்துவமனையில் இவை இலவசமாக வழங்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தனியார் அமைப்புகள் மூலம் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.  ஆனால் கடந்த சில மாதமாக நாய்களுக்கு கருத்தடை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சியில் பல பகுதிகளில் நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது.   நாய் தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் விதிமுறை தற்போது அமுலில் உள்ளதால் நாய்களை பிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் 27ம் தேதி முதல் நாய் பிடிக்கும் பணி துவங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுவாக நவம்பர் மாதம் நாய்களின் இனப்பெருக்க காலம். இந்த காலக்கட்டத்தில் நாய்களுக்கு வெறிநோய் அதிகமாக ஏற்படும். வீட்டில் வளர்க்கும் நாய்களும் வெறிநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
தெருவோரங்களில் சுற்றி திரியும் நாய்களால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.  மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,`மாநகராட்சி பகுதிகளில் 7 ஆயிரம் நாய்கள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தேர்தல் விதிமுறை  அமலில் உள்ளதால் நாய் பிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு 27ம்தேதி முதல் மீண்டும் நாய் பிடிக்கும் பணிகள் துவங்கும்’ என்றனர்.

Tags : corporation areas ,
× RELATED பெங்களூரு உள்ளிட்ட 11 மாநகராட்சி...