×

நிலம் தொடர்பான மனுக்களை விரைந்து பரிசீலிக்க வேண்டும்

குலசேகரம், மே 15: தனியார் வன பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலத்தை விற்கவும், வாங்கவும், அதில் உள்ள மரங்களை வெட்டவும் அனுமதி கேட்டு குவிந்துள்ள மனுக்களை அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு கூட்டம் குலசேகரத்தில் நடந்தது. செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், ஸ்டாலின்தாஸ், அகமது உசேன், மாதவன், சேகர், உஷா பாசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை அவதிக்கு உள்ளாக்கி வருகிறது. இதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும். தனியார் வன பாதுகாப்பு சட்டத்தால் தங்கள் சொந்த நிலத்தில் உள்ள மரங்களை வெட்டவும், நிலங்களை விற்கவும் மற்றும் வாங்கவும் அனுமதி கேட்டு குவிந்துள்ள மனுக்களை விரைந்து பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும். மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்