×

நாகர்கோவிலில் வெறிச்சோடி கிடக்கும் இன்ஜினியரிங் ஆன்லைன் பதிவு மையம் 360 பேர் மட்டுமே பதிவு




நாகர்கோவில், மே 15 :  இன்ஜினியரிங் படிப்பு மீதான மோகம் குறைந்ததால், குமரியில் உள்ள ஆன்லைன் விண்ணப்ப பதிவு மையம்  வெறிச்சோடி கிடக்கிறது.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன் லைன் விண்ணப்ப வினியோகம் கடந்த 2ம் தேதி தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை ெபாறியியல் படிப்பில் சேர மாணவ, மாணவிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் சேர அதிக ஆர்வம் காட்டிய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை வாங்கவே முட்டி மோதுவது வழக்கம். குமரி மாவட்டத்தில் மட்டுமே 2 ஆயிரத்துக்கும் அதிகமான பொறியியல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். இது தவிர கவுன்சலிங் இல்லாமல் நேரடியாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் போட்டிகள் ஏற்படும். இதனால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும், பொறியியல் கல்லூரிகளில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளில் மாணவ, மாணவிகளின் ஆர்வம் குறைந்துள்ளது. இதற்கு மாற்றாக கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. குறிப்பாக பி.காம், பி.ஏ. கணிதம், இயற்பியல், வணிகவியல் படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி விண்ணப்பிக்கிறார்கள்.

இந்த முறை பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்ப வினியோகம் நடக்கிறது. வழக்கமாக நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் தான் ஆன்லைன் பதிவு மையம் இருக்கும். ஆனால் தற்போது அந்த வளாகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் இருப்பதால், நாகர்கோவில் இந்து கல்லூரிக்கு ஆன்லைன் மையம் மாற்றப்பட்டது.  2ம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து நேற்று (14ம் தேதி) வரை சுமார் 360 பேர் மட்டுமே இந்த ஆன்லைன் மையத்துக்கு வந்து பதிவு செய்துள்ளனர். இதில் இரு நாட்கள் மட்டும் தலா 70 பேர் வந்துள்ளனர். மற்ற நாட்களில் 10 பேர், 15 பேர் வரை தான் வந்து பதிவு செய்து இருக்கிறார்கள். கவுன்சலிங்கை பொறுத்தவரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் (TNEA) சென்னையில் நடைபெறும். மற்றவர்களுக்கான கவுன்சலிங் என்பது ஆன்லைனில் தான் நடைபெற உள்ளது. இதனால் கவுன்சலிங்கில் பங்கேற்க சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை. விண்ணப்பம் பதிவு செய்தல், சான்றிதழ் சரிபார்த்தல், விரும்பிய கல்லூரியை தேர்ந்தெடுத்தல் (Online Counselling) ஆகிய அனைத்தையும் இந்த மையத்திலேயே செய்து கொள்ளலாம். வரும் 31-05-2019 வரை விண்ணப்ப பதிவு நடைபெறும்.

மாணவர்கள் கூட்டம் இல்லாததால் ஆன்லைன் பதிவு மையத்தில் இருக்கும் ஊழியர்களும் பதற்றமின்றி இருக்கிறார்கள். வீடுகளில் இருந்தும், தனியார் ஆன்லைன் சென்டர்கள் மூலமும் பதிவு செய்யலாம் என்பதால் இங்கு பெரிய அளவில் கூட்டம் இல்லை என்று ஊழியர்கள் கூறினர். ஆனால் வெளியே உள்ள ஆன்லைன் மையங்களிலும் இன்ஜினியரிங் பதிவு என்பது எதிர்பார்த்த அளவு இல்லை. பொறியியல் படிப்புக்கு இப்போது மவுசு குறைந்துள்ளது. பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பதே இல்லாத நிலை கூட உள்ளது.  பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் பலர் வேலைக்காக அலைந்து திரிகிறார்கள். ஆனால் கலை அறிவியல் படிப்புகளில் அதிகளவு வேலை வாய்ப்பு உள்ளதால் இப்போது மாணவ, மாணவிகள் அங்கு தான் விண்ணப்பங்களை பெற ஆர்வம் காட்டுகிறார்கள் என கல்வியாளர்கள் கூறி உள்ளனர்.

Tags : Nagarcoil ,
× RELATED நாகர்கோவில் - நெல்லை பயணம் கண்டக்டர்...