×

டெங்கு இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை

புதுச்சேரி, மே 15: புதுச்சேரி தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட இயக்குநர் டாக்டர் சுந்தர்ராஜன் கொசப்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஆண்டுதோறும் மே 16ம் தேதி (நாளை) டெங்கு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை அருகே டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, பேரணி நாளை நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது. இதில் கலைக்குழு மூலம் டெங்கு விழிப்புணர்வு பாடல்கள் இசைக்கப்படும். தொடர்ந்து, காலை 7.45 மணிக்கு டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது. தலைமை செயலர் அஸ்வனிகுமார் கண்காட்சியை திறந்து வைக்கிறார். இதில் 4 அரங்கங்கள் இடம்பெறுகிறது.

நோய் கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நீர் நிலைகளில் கொசுக்களின் பல்வேறு வளர்ச்சி நிலைகள் குறித்து காட்சிப்படுத்தப்படுகிறது. இந்திய முறை மருத்துவத்துறை சார்பில் இயற்கை முறையில் கொசுக்களை வரவிடாமல் விரட்டும் மூலிகை செடிகள் பற்றி விளக்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பார்வையிடலாம். காந்தி சிலை அருகில் இருந்து புறப்படும் பேரணி, சுகாதாரத்துறை இயக்குனரகம் வரை செல்கிறது. புதுச்சேரியில் கடந்த ஆண்டு 2 பேர் டெங்குவுக்கு பலியாகினர். 581 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு இதுவரை 250 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.லாஸ்பேட்டை அசோக் நகர் வாணிதாசன் வீதி, பாரதிதாசன் வீதி, பாரதியார் சாலை ஆகிய பகுதியில் டெங்கு அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக கண்டறிந்துள்ளோம். அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறி தேங்கியது தான் இதற்கு காரணம்.

மத்திய சுகாதாரத்துறை தென்மண்டல இயக்குனர் அலுவலகத்தின் பூச்சியியல் வல்லுனர் குழு புதுச்சேரி வந்துள்ளது. அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அசோக் நகரை தொடர்ந்து முத்தியால்பேட்டையில் ஆய்வு செய்து வருகின்றனர். வரும் 17ம் தேதி வரை புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் ஆய்வு பணியை மேற்கொள்கின்றனர்.டெங்குவை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். டெங்கு கொசு முட்டை ஒரு வருடம் வரை உயிர் வாழக்கூடியது. ஒரு வாரத்துக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க கூடாது. தற்போது காய்ச்சல் இல்லாமலே டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால், கடந்த ஜனவரி முதல் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மலேரியா உதவி இயக்குநர் டாக்டர் கணேசன் உடனிருந்தார்.

Tags : Puducherry ,dengue state ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...