×

வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர், டிஐஜி ஆய்வு

புதுச்சேரி, மே 15: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவு மற்றும் விவிபாட் இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களான லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்காக மத்திய ராணுவ படையினரும், 2ம் அடுக்காக இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீசாரும், 3ம் அடுக்காக புதுச்சேரி காவல்துறையும், ஒரு எஸ்பி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிர்வாக நீதிபதி, 3 வேலை சுழற்சி முறையில் கண்ககாணித்து வருகிறார். வாக்கு எண்ணும் மையத்தில் 2 தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு படையினர் பணிபுரிந்து வருகின்றனர். 2 மையங்களும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு ஜெனரேட்டர் அமைக்கப்பட்டு இடைவிடாத மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண், மத்திய ராணுவப்பிரிவு டிஐஜி இளங்கோ ஆகியோர் நேற்று மாலை வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று பாதுகாப்பை உறுதிபடுத்தினர். அப்போது வாக்கு எண்ணும் மையத்தின் சிறப்பு அதிகாரி செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, கலெக்டர் அருண் நிருபர்களிடம் கூறும்போது, பாதுகாப்பு குறித்து வழக்கமான மேற்கொள்ளப்படும் ஆய்வு தான் இது. இந்த முறை ராணுவப்பிரிவு டிஐஜி உடன் வந்திருந்தார். இங்கு பாதுகாப்பு சரியாக உள்ளது. சிசிடிவி கேமரா, லாக் புக், ரிஜிஸ்டர் உள்ளிட்ட ஆவணங்கள் சரிவர உள்ளது.வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் ஓட்டு எண்ணப்படும். தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அதனுடன் சேர்த்து தொகுதிக்கு 5 விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து, அவை ஒன்றாக இருந்தால்தான் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை இரவு வரை நடக்கும். வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கும் நேரம் எப்போது என இப்போது சரிவர சொல்ல முடியாது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 3 கட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். எத்தனை அதிகாரிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதை பிறகு தெரிவிக்கிறேன், என்றார்.

Tags : Collector ,DIG ,vote counting centers ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...