ஓரிரு வாரத்தில் சீசன் துவங்கும் அறிகுறி குற்றாலத்தில் பராமரிப்பின்றி பூங்காக்கள் சிதிலம்

தென்காசி, மே 15: குற்றாலத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் சீசன் துவங்குவதற்கான அறிகுறி நிலவும் நிலையில் இங்குள்ள பூங்காக்கள் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன. இதுவிஷயத்தில் கலெக்டர் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க முன்வருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய  மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த சீசன் காலத்தில் நாடு முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கானோர் குற்றாலத்திற்கு சுற்றுலா வருவர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் குடும்பத்தினருடன் வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். இவ்வாறு சுற்றுலா வரும் பயணிகள் காலையில் குற்றால அருவியில் குளித்துவிட்டு பூங்காக்களில் சற்று ஹாயாக குடும்பத்துடன் அமர்ந்து பொழுதுபோக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

 சுற்றுலா தலமான குற்றாலத்தைப் பொருத்தவரை பஸ் நிலையத்தையொட்டி கலைவாணர் அரங்குடன் அமைந்துள்ள பூங்கா மட்டுமே கட்டணமில்லாத பூங்காவாகத் திகழ்கிறது. நீச்சல் குளம் அருகேயுள்ள சிறுவர் பூங்காவில் உள்ளே செல்ல கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குற்றாலத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளும், குழந்தைகளும் இந்த பூங்காவில் விளையாடி மகிழ்வர். மேலும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து வருகைதருவோரும், உள்ளூர்வாசிகளும் வீட்டிலேயே உணவு வகைகளை முன்கூட்டியே தயாரித்து எடுத்துவந்து குற்றாலம் ெமயினருவியில் நீராடிய பிறகு இங்கு உண்டு செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இப்பூங்கா முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இப்பூங்காவில் அமைக்கப்பட்ட சிறுவர்  விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் மருந்துக்குக்கூட பராமரிப்பு செய்யப்படாமல் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் பூங்காவில் உள்ள நீரூற்றுகள், சிற்பங்கள் என பல்வேறு இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்ட அனைத்து விளையாட்டு சாதனங்களும் பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் காட்சிப்பொருளாகவே மாறி விட்டன. குற்றாலத்தில் சீசன் துவங்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளன. எனவே, கலெக்டர் உள்ளிட்ட உயர்  அதிகாரிகள், இதுவிஷயத்தில் தனிக்கவனம் ெசலுத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி இழுத்தடிக்காமல் பூங்காக்களையும், அதில் உள்ள விளையாட்டு உபகரணங்களையும் சீரமைக்க முன்வர வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Parks ,season start ,
× RELATED உழவர்- அதிகாரி திட்டம், புதிய உணவுப்...