×

பட்டுக்கோட்டை அருகே நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை சரக டிஐஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு

தஞ்சை, மே 15: எங்களது நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று புகார் மனு அளித்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி வடக்கு வேளாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி செவ்வந்தி. இவர் நேற்று தனது உறவினர்களுடன் தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார். அதில் நானும், எனது குடும்பத்தினரும், எங்கள் ஊரை சேர்ந்த ஒருவருடைய வீட்டிலும், நிலத்திலும் கொத்தடிமையாக கடந்த 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தோம். எனது கணவரின் சகோதரர் பழனிவேல், மாமனார் அய்யாக்கண்ணு, மாமியார் கங்கையம்மாள், மகன்கள் சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் கொத்தடிமையாக வேலை செய்து வந்தோம். கருப்பையன் சிறுக, சிறுக சேர்த்த பணத்தை நிலம் வாங்குவதற்காக கோட்டைக்காட்டை சேர்ந்தவரிடம் கொடுத்தார். நிலம் வாங்கிய அவர் பின்னர் அதை தர மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் கொத்தடிமையாக வேலை பார்த்தவரிடம் கூறினோம். அவர் எங்களுக்கு உதவுவதாக கூறினார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.


இந்நிலையில் எனது மாமனார் இறந்து விட்டதால் அவருடைய கைவிரல் ரேகையை, நாங்கள் கொத்தடிமையாக வேலை பார்த்தவர் பதிவு செய்து எங்களை ஏமாற்றி நிலத்தை அபரிகத்து கொண்டார். தற்போது அந்த இடத்தை காலி செய்யுமாறு கூறி அடியாட்களுடன் வந்து தகராறு செய்து வீடுகளை சேதப்படுத்திவிட்டார். இதை தடுத்தபோது நான், எனது கணவர், பழனிவேல் ஆகியோர் காயமடைந்தோம். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக போலீசார், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. எனவே எங்கள் நிலத்தை அபகரித்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சமூக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : victims ,office ,DIG ,land ,Pattukottai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்