×

துக்காம்பாளைய தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் போராட்டம் நடத்த மக்கள் முடிவு

கும்பகோணம், மே 15: கும்பகோணம் துக்காம்பாளைய தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். கும்பகோணம் துக்காம்பாளையத்தெரு ஒம்சக்தி சாகிப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் அடித்தட்டு மக்கள். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை தொட்டி மேன்ஹோல் உடைந்தும், தொட்டிகள் நிரம்பியும் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அங்கு குடியிருப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள், சரும நோய்கள் வரும் அபாயம் உள்ளது. இதுபோல் பாதாள சாக்கடை மேன்ஹோல் அடிக்கடி உடைந்து வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவி–்த்தாலும் கண்டுகொள்வதில்லை. இங்கு வரும் அலுவலரிடம் தெரிவித்தால் கண்துடைப்புக்காக பணிகளை செய்து விட்டு சென்று விடுகின்றனர்.

இதனால் பாதாள சாக்கடை குழாய் அடைத்து கொண்டு கழிவுநீர் வெளியேறி   சாலை முழுவதும் ஓடுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கும்பகோணம் துக்காம்பாளைய தெரு, புதுப்பேட்டை பகுதியில் பாதாள சாக்கடை தொட்டி நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுவது குறித்து நடவடிக்கை எடுத்து அப்பகுதியை சுகாதாரமான தெருவாக மாற்ற வேண்டும். இந்த பணிகளை விரைந்து செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், துக்காம்பாளைய தெருவில் அடிக்கடி பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்தும், அடைத்து கொண்டும் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தால் கடமைக்காக பணிகளை செய்து விட்டு செல்கின்றனர். பின்னர் சில நாட்களில் மீண்டும் பழையபடி கழிவுநீர் வெளியேறுகிறது.


கடந்த 10 நாட்களாக கழிவு நீர் வெளியேறுவது குறித்து, நகராட்சி அலுவலர்களிடம் புகாரளித்த போது, அப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், நள்ளிரவு நேரத்தில் தான் சுத்தம் செய்ய வேண்டுமென நள்ளிரவு 12 மணிக்கு வீட்டிலிருக்கும் எங்களை எழுப்பி வீடுகள் தோறும் ரூ.50 வாங்கினர். ஆனால் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை. அவர்களிடம் கேட்டதற்கு வேறு எங்கேயோ அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அலட்சியமாக பதில் கூறி விட்டு செல்கின்றனர். எனவே துக்காம்பாளைய தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீரை வெளியேறுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நகராட்சி அலுவலகம் முன்புள்ள மேன்ஹோலை திறந்து கழிவுநீரை நகராட்சி அலுவலகன வாயிலில் கொட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags : street ,Tukamalai ,
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து