×

உழவர் சந்தையில் கூடுதல் விலைக்கு தக்காளி விற்பனை பொதுமக்கள் முற்றுகையால் குறைப்பு

நாமக்கல், மே 15: நாமக்கல் உழவர் சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் அதிகாரியை முற்றுகையிட்டனர்.
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி(முதல் தரம்) ₹38ம், இரண்டாம் தரம் ₹32 முதல் ₹34 என உழவர்சந்தை நிர்வாக அலுவலர் சிவராஜ் விலை நிர்ணயம் செய்தார். நேற்று காலை சந்தைக்கு வந்த கலைச்செல்வி என்ற விவசாயி அவர் கொண்டு வந்திருந்த தக்காளியை ஒரு கிலோ ₹38க்கு விற்பனை செய்துவிட்டு காலை 7 மணிக்குள் சென்றுவிட்டார். உழவர்சந்தைக்கு தக்காளி கொண்டு வந்திருந்த மற்ற விவசாயிகளும் ஒரு கிலோ தக்காளியை ₹38க்கு விற்பனை செய்ய தொடங்கினர்.

ஆனால், அந்த தக்காளி இரண்டாம் தரமாக இருந்ததால் ₹38 கொடுத்து வாங்க பொதுமக்கள் மறுத்தனர். இதனால், தக்காளி வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சிலர் உழவர்சந்தை அலுவலரை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து நிர்வாக அலுவலர் சிவராஜ் சம்பந்தபட்ட விவசாயிகளின் கடைக்கு சென்று இரண்டாம் தரமாக உள்ள தக்காளியை ₹34க்கு விற்பனை செய்யும்படி அறிவுறுத்தி, பொதுமக்களையும் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

Tags : siege ,farmers market ,
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை