×

பொன்னமராவதி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

பொன்னமராவதி, மே 15: பொன்னமராவதி ஒன்றியத்தில் பள்ளி  செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்  பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் இலவச  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பொன்னமராவதி வட்டார வள  மையத்திற்குட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வீடு வீடாக பள்ளி  செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் சார்ந்த ஏப்ரல் மாதம்  முதல் கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 11ம்தேதி மேலத்தானியம், அண்ணாநகர், ஜே.ஜே.நகர், காமராஜ் நகர், கட்டையாண்டிப்பட்டி,  பட்டமரத்தான்நகர் ஆகிய பகுதிகளில் பொன்னமராவதி ஒன்றிய ஆசிரியர்  பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம், பச்சமுத்து, மதனகுமார், சரவணன்,  அழகுராஜா, சக்திவேல்பாண்டி, சரவணன், ரஹிமாபானு, புவனேஸ்வரி  சிறப்பாசிரியர்கள் தனலெட்சுமி, ரபேல்நான்சிபிரியா ஆகியோர்  இக்கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

இக்கணக்கெடுப்புப் பணியை பள்ளி  செல்லா குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் மற்றும்  உள்ளடங்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.  பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்கள்,  செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, மணல்குவாரி, தொழிற்சாலைகள்,  விவசாயங்கள் நடைபெறும் இடங்களிலும், பேருந்து நிலையம், உணவகங்கள், பழம்,  பூ, காய்கறி அங்காடிகள் ஆகிய பகுதிகளில் இச்சிறப்பு கணக்கெடுப்புப்பணி  நடைபெற்று வருகிறது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பார்வையின்போது வட்டார  வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் உடனிருந்தார்.

Tags : School Cella Census ,
× RELATED பொன்னமராவதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு