தோகைமலை அருகே கழுகூர் உடையாபட்டி சாலையில் விரிசல் விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் அவதி

தோகைமலை, மே 15: தோகைமலை அருகே கழுகூர் உடையாபட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட குளித்தலை மணப்பாறை மெயின் ரோடு தரமில்லாமல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் பழுதான பகுதிகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் உள்ள கழுகூர் ஊராட்சி எ.உடையாபட்டி முதல் தேசியமங்களம் வரை சிஆர்ஐடிபி திட்டத்தின் கீழ் சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 3 கிமீ தொலைவிற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்தது. இந்த பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்தநிலையில் கழுகூர் எ.உடையாபட்டி வடக்கு பகுதியில் உள்ள மேட்டில் புதியதாக அமைக்கப்பட்ட தார்சாலையில் விரிசல் ஏற்பட்டு மரணக்குழியாக காட்சி அளிக்கிறது. இதனால் குறுகிய காலத்திலேயே தார்சாலை பழுதாகிவிடும்.

குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் புதியதார் சாலை அமைத்து 2 மாதத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் மரணக்குழியில் இரு சக்கர வாகனங்கள் சிக்கி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அரசு நிதி அதிகாரிகளின் அலட்சியத்தால் தரமில்லாமல் தார்சாலை அமைக்கப்பட்டதற்கு இப்பகுதி சமூகஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். , குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் கழுகூர் எ.உடையாபட்டியில் அமைக்கப்பட்ட புதிய தார்சாலையில் பல்வேறு இடங்களில் தரமில்லாமல் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இப்பகுதியினர் தெரிவித்தனர். ஆகவே விரிசல் ஏற்பட்டு வரும் பகுதியை அகற்றிவிட்டு தரமான தார்சாலை அமைத்து விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories:

>