×

கர்ப்பிணிகளுக்கான அரசு நிதியுதவி பெற ₹1,500 லஞ்சம் வாங்கிய நர்சுக்கு 3 ஆண்டு சிறை வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு

வேலூர், மே 15: கர்ப்பிணிகளுக்கான அரசு நிதியுதவி பெற ₹1,500 லஞ்சம் வாங்கிய நர்சுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன்(30), விவசாயி. இவரது மனைவி சத்யா(27). இவர் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி மாடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பகால பரிசோதனைக்காக சென்றார். அப்போது, அரசின் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்ட நிதியுதவிக்காக ஆரம்ப சுகாதார நிலைய நர்சு பத்மாவதியிடம் அணுகியுள்ளார். அதற்கு, நர்சு பத்மாவதி இத்திட்ட நிதியுதவி பெற ₹2 ஆயிரத்தை தனக்கு தர வேண்டும் என்று சத்யாவிடம் கூறியுள்ளார். அப்போது சத்யாவுடன் வந்திருந்த கணவர் முனியப்பன் தன்னிடம் அவ்வளவு பணம் கிடையாது என்று கூறி உள்ளார். பின்னர் ₹1,500 தருவதாக நர்சு பத்மாவதியிடம் கூறியுள்ளார். ஆனாலும் பணம் தர விரும்பாத முனியப்பன் இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

அவர்களது ஆலோசனையின் பேரில், 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி நர்சு பத்மாவதியிடம், முனியப்பன் ₹500ஐ கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாரி, கர்ப்பிணிகளுக்கான நிதியுதவி பெற லஞ்சம் பெற்ற நர்சு பத்மாவதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags : nurses ,Vellore ,women ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...