×

மாநில அளவிலான கபடி போட்டி வடுவூர் வேதராஜன் நினைவுக்குழு சாம்பியன்

மன்னார்குடி, மே 15: வடுவூர் தென்பாதியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் வடுவூர் வேதராஜன் நினைவு கபடி குழு முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. திருவாரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தால் அங்கீரிகரிக்கப்பட்ட வடு வூர் தன்னரசு நாடு டாக்டர் போஸ் நினைவுக்குழு சார்பில்  18ம் ஆண்டு  மாநில  அளவிலான 65 கிலோ எடைப்பிரிவு  ஆண்கள் கபடி போட்டி வடுவூர் தென்பாதி  கிராமத்தில் அமைக்கப்பட்ட மின்னொளி ஆடுகளத்தில் கடந்த  இரண்டு நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் கோவை, சேலம், திருவாரூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தஞ்சை உள்ளிட்ட  பல்வேறு நகரங்களில் இருந்து  40 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற கபடி போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நேற்று மாலை நடைபெற்றது. இறுதியாட்டத்தில் வடுவூர் வேதராஜன் நினைவு குழு அணியும், வடுவூர்  புதுக்கோட்டை சிவானந்தம் ஜெயபால் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில் அதிக புள்ளிகள் பெற்று வடுவூர் வேத ராஜன் நினைவுக்குழு  அணியினர் முதலிடம் பெற்று சாம்பியன் கோப்பையை வென்றனர். புதுக்கோட்டை சிவானந்தம் ஜெயபால் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி இரண்டாம் இடத்தையும், திருவாரூர் அகிலன் மார்ட்டின்  அணி, தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு மேலையூர் தந்தை பெரியாரின் இளைய திலகங்கள்  அணி ஆகியோர்  மூன்றாம் இடத்தை பெற்றனர்.


முன்னதாக இறுதி போட்டியை தமிழக சுற்றுலாத்துறை ஓய்வு பெற்ற அதிகாரி சேகர்  துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பை மற்றும் பரிசுகளை  மன்னார்குடி  நிலவள வங்கி தலைவர் செந்தில்ராஜ், ஆசிரியர் மதிவண்ணன்
ஆகியோர் வழங்கினர். மாநில அளவிலான கபடி போட்டியை முன்னிட்டு  டாக்டர் போஸ் நினைவுக்குழு சார்பில் அதன் நிர்வாகிகள் ஏராளமான  மரக்கன்றுகளை நட்டனர். மாநில  அளவில் விறுவிறுப்பாக நடந்த  கபடி போட்டிகளை ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு கண்டு களித்தனர்.

Tags : Vaduvur Vedarajan Memorial Champion ,
× RELATED முத்துப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற செயலர் ஆதரவாளர்களுடன் மறியல்