×

வடுவூர் பகுதியில் கத்தரியில் குருத்து, காய் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண். அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ஆலோசனை

மன்னார்குடி, மே 15: திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே முக்குளம் சாத்தனூர் மற்றும் செருமங்கலம் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்தரி வயல்களில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம சுப்பிரமணியன்,  பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ராஜா ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கத்தரியில் குருத்து மற்றும் காய்துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து பேராசிரியர் ராஜா ரமேஷ் கூறியதாவது,
கத்தரியைத் தாக்கும் பல்வேறு வகையான பூச்சிகளில் குருத்து மற்றும் காய்த் துளைப்பான் மிக அதிக அளவில் சேதத்தை உண்டாக்கும். ஒரு பெண் அந்துப் பூச்சியானது 250 முட்டைகளை இளம் குருத்து மற்றும் புதியதாக உருவாகும் காய்களில் இடும். இதிலிருந்து பொரித்து வெளிவரும் இளம் சிவப்பு புழுக்கள் குருத்து மற்றும் காய்களைத் துளையிடப்பட்டு சேதப்படுத்தும். இதனால் இளம் குருத்து வாடிக் காணப்படும். மேலும் புழுவின் கழிவுகளும் காய்களிலேயே காணப்படுவதால் விற்பனை பாதிக்கப்படும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்:நடவு செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு வயலில் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் இனக் கவர்ச்சிப் பொறியை பயன்படுத்தி அவற்றின் தாக்குதலை அறிந்து கொள்ளலாம். அதுவே ஒரு ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில பயன் படுத்தும் போது அதிக அளவில் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இந்த இனக் கவர்ச்சிப்பொறியை நாற்று நட்ட 20 நாட்கள் கழித்து கத்திரி செடிகளை விட 15 செமீ உயரத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும்.
தாக்குதலுக்குள்ளான செடியை அவ்வப்பொழுது பறித்து அப்புறப்படுததிட வேண்டும். டிரைக்கோகர்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 20 ஆயிரம்  முட்டைகள் என்ற எண்ணிக்கையில் நாற்று நட்ட 21 நாளிலிருந்து வாரம் ஒரு முறை
வெளியிட வேண்டும.


பொறி வண்டு, கண்ணாடி இறக்கைப்பூச்சி, தொழுவெட்டுக்கிளி, தட்டான் உள்ளிட்ட நன்மை செய்யும் பூச்சிகளையும், சிலந்தி போன்ற உயிரினங்களையும் பாதுகாத்து இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.வேப்பெண்ணெய் சார்ந்த அசடிராக்டின் 1 சத மருந்தை ஒரு ஏக்கருக்கு 600 மிலி அல்லது அசடிராக்டின் 0.03 சத மருந்தை 1 லிட்டர் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டினால் ஒரு ஏக்கருக்கு இமா மெக்டின் பென்சொயேட் 5 எஸ்.ஜி - 80 கிராம் அல்லது தயோடிகார்ப் 75 டிடபிள்யூ.பி - 400 கிராம் அல்லது ப்ளுபென்டியாமைட் 20 டபிள்யூ.டி.ஜி - 150 கிராம் அல்லது குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி.-80 மிலி என்ற அளவில் 200 முதல் 300 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் வாயிலாக மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப் படுத்தலாம். இவ்வாறு பேராசிரியர் ராஜா ரமேஷ் கூறினார்.

Tags : stem borer attack ,area ,Vaduvur ,Professors ,science center ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...