×

முத்துப்பேட்டை உதயமார்த்தாண்டபுரத்தில் அபாய நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றம்

முத்துப்பேட்டை, மே 15: தினகரன் செய்தி எதிரொலியாக முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில்   எந்தநேரத்திலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உதயமார்ததாண்டபுரம்  ஊராட்சி அலுவலகம் அருகே பிரமாண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளது. பத்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீர் உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் தரமற்ற கட்டுமானத்தால் கட்டிய சில நாட்களிலே பல பகுதிகளில் உள்ள தூண்கள் மற்றும் தொட்டியில் விரிசல் ஏற்பட்டது.  அதேபோல்  குடிநீர் வடிகால் வாரியமும், ஒன்றிய அலுவலகமும் போதிய பராமரிப்பு செய்யாததால் குடிநீர் டேங்க் முற்றிலும் பழுதானது. இதனையடுத்து மூன்று வருடங்களுக்கு முன் இந்த மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை லட்சக்கணக்கில் செலவிட்டு மீண்டும் பழுது நீக்கம் செய்யப்பட்டது.


பெயரளவுக்கே பணிகள் நடந்ததால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் நிலை மேலும் மோசமானது. தொட்டியை தாங்கி நிற்கும் பில்லர்களில் விரிசல் ஏற்பட்டு வெடிப்புகள் உருவானது. அதிலிருந்த சிமெண்ட் காரைகள் பெயர்ந்து உதிர்ந்து உள்ளிருக்கும் இரும்பு கம்பிகளும் வெளியே தெரிந்து  பில்லர்களின் இணைப்புகளும் விரிசல் கண்டது. கிழக்கு கடற்கரை சாலை அருகே இந்த மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும்போது தொட்டியும்  ஆடியது.  இதனால் பலமிழந்து நிற்கும் குடிநீர் டேங்கை கண்டு இப்பகுதியினர் அச்சத்தில்  பீதியடைந்து இருந்தனர். அதனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து அல்லது இடித்து அப்புறப்படுத்தி புதிதாக கட்டி தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல முறை ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் எடுத்து கூறியும் எந்த பலனும் இல்லை.

இது குறித்து கடந்த மார்ச் 27ம் தேதி தினகரனில் இனியும் இந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்றாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்று சுட்டிக்காட்டி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இதனை நேரில் பார்வையிட்டு உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று தற்பொழுது முற்றிலும் இடித்து அப்புறப்படுத்த பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சரியான நேரத்தில் சுட்டிக்காட்டி படத்துடன் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு அப்பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

Tags : Udayamardhandapuram ,
× RELATED குமரி மாவட்டம் கடுக்கரை அருகே...