×

உண்மை சம்பவங்களை கண்டறிய 30 போலீசாருக்கு சீருடையுடன் கேமரா

ஈரோடு, மே 14:  ஈரோட்டில் குற்ற நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்களின் போது உண்மை சம்பவங்களை கண்டறிய ஈரோடு டவுன் சப் டிவிசனில் 30 போலீசாருக்கு சீருடையுடன் அணியும் கேமரா (பாடி வோர்ன்) வழங்கப்பட்டது. இந்த கேமராவுடன் உள்ள போலீசாரின் பணியை ஈரோடு எஸ்பி நேற்று துவக்கி வைத்தார்.ஈரோடு மாவட்டத்தில் பணியில் இருக்கும் போலீசார்களை கண்காணிக்கவும், ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டம், குற்ற நிகழ்வுகள் நடைபெறும் போது அதன் உண்மை தன்மை கண்டறியும் வகையில் டவுன் சப் டிவிசனில் பணியாற்றும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் 30 பேருக்கு சீருடையில் அணியும் கேமரா (பாடி வோர்ன் கேமரா) கடந்த 1ம் தேதி வழங்கப்பட்டது.இதில், தேர்வு செய்யப்பட்டுள்ள போலீசாருக்கு அந்த கேமராவை பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு டவுன், தாலுகா, சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம் ஆகிய 5 போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் 15பேருக்கும், நகர போக்குவரத்து போலீசார் 15 பேருக்கும் முதற்கட்டமாக சீருடையுடன் கேமரா அணிந்து தங்களது பணியினை தொடர்ந்தனர்.

இதுகுறித்து எஸ்பி சக்தி கணேசன் கூறியதாவது:போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள பாடி வோர்ன் கேமரா 64 ஜிபி மெமரி கொண்டது. 5 மணி நேரம் பவர் பேக் அப் கொண்டது. இந்த சிஸ்டம் சென்னையில் முதன்முதலில் துவங்கப்பட்டது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கொண்டு வர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.போலீசார் சீருடையுடன் கேமரா அணிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் அனைத்து காட்சிகளையும் நேரிடையாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்க்கும் வசதிகள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கேமராவில் பதிவான காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் உள்ள மெயின் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட உள்ளன. குற்ற நிகழ்வுகள், போக்குவரத்து பிரச்னை, போலீசாருக்கும்-பொதுமக்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளின் போது எதனால் அவை ஏற்பட்டது.யார் மீது தவறு என்பதை இந்த கேமரா மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட சில நிகழ்வுகள் நீதிமன்றத்தில் ஆதாரமாக காவல் துறை சார்பில் தாக்கல் செய்ய உதவிகரமாக இருக்கும்.

இந்த கேமரா தற்போது டவுன் சப்டிவிசனில் உள்ள 5 போலீஸ் ஸ்டேஷன்களில் 30 போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. கேமராவுடன் போலீசார் ரோந்து செல்லும் போது, இவர்களுக்கு உதவியாக ஊர்காவல் படை, போக்குவரத்து வார்டன்கள், எப்ஓபி சேர்ந்தவர்கள் உடன் செல்வர். 24 மணி நேரமும் 3 சிப்ட்டுகளாக 60 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களை கண்காணிக்க தனி மானிட்டர், லைவ் ஸ்டிரிமிங், டிராக்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் 200 கேமரா வாங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : policemen ,
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...