தகராறை விலக்கியவர் மீது சரமாரி தாக்குதல்

வில்லியனூர், மே 14: வில்லியனூர் அருகே உள்ள கோபாலன்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்ற குபேரன்சக்ரவர்த்தி(22). இவர் டிஜிட்டல் கிராபிக்ஸ் மற்றும் பேனர் கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் கோபாலன்கடை கோயில் அருகே அம்மா நகர் பகுதியை சேர்ந்த தீனா என்பவர் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். அவர் அடிக்கடி இதுபோன்று அப்பகுதியில் வேகமாக செல்வதால் அலெக்சாண்டர், அருண் ஆகியோர் தீனாவை மடக்கி எச்சரித்துள்ளனர்.இதனால் தீனாவுக்கும் அலெக்சாண்டர், அருணுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தீனா செல்போனில் தொடர்பு கொண்டு அவரது நண்பர் சதீஷ், சுரேஷ், இமான் மற்றும் சிலரை அங்கு வரவழைத்து அலெக்சாண்டர் மற்றும் அருணை தாக்கியுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த ராஜேஷ் அவர்களை விலக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீனா மற்றும் அவரது நண்பர்கள் ராஜேசை சரமாரியாக தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் தீனா மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். படுகாயம் அடைந்த ராஜேஷ் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இமானை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடி
வருகின்றனர்.

× RELATED வெள்ளியணை அருகே கோயில் விழாவில் தகராறு வாலிபருக்கு கத்திக்குத்து