×

திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல் போதை வாலிபர்கள் அத்துமீறல் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

குலசேகரம், மே 14: கோடை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அருவியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டருக்கும் முன்னதாகவே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து நீண்ட நேரம் காத்திருந்து அருவியில் குளிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதேபோல் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் நடக்கும் உல்லாச படகு சவாரியிலும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகில் சென்று இயற்கை அழகை ரசிக்கின்றனர். அருவியில் காலை முதல் மாலை வரை நெரிசலாக உள்ளது. நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதற்கும் போதிய வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திற்பரப்பு அருவியில் குளிக்கும் இடத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக பேரூராட்சி நிர்வாகத்தால் 3 ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேராலும் தற்போதைய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. உற்சாக மிகுதியால் வரும் இளைஞர்கள் செல்ேபானில் படம் எடுப்பது, பெண்கள் குளிக்கும் பகுதியில் அத்துமீறுவது போன்ற செயல்களால் தினசரி பிரச்னை ஏற்படுகிறது.

திற்பரப்பு அருவி அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. குழந்தைகளுடன் பெண்களும் குளிக்கின்றனர். போதையில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சில இளைஞர்கள் பெண்களும் நீச்சல் குளத்தில் குளிப்பதால் இவர்களும் அங்கு குளிப்பதற்காக குதிக்கின்றனர். இதனால் நீச்சல் குளத்திலும் பிரச்னை ஏற்படுவது சகஜமாகியுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடுமையான கூட்டம் நிலவியது. திற்பரப்பு சுற்றுவட்டார பகுதியில் கடும் வெயில் நிலவியபோதும், பிற்பகலில் சாரல் மழை பெய்தது. நீண்ட நேரம் இந்த சாரல் நீடித்ததால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. போதையில் வந்த சிலர் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் நுழைந்து குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற முன்னாள் ராணுவத்தினர் அவர்களை பிடித்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் நீச்சல் குளத்தில் இறங்கி பெண்களுடன் சேர்ந்து குளிக்க முயன்றனர். பாதுகாப்புக்கு நின்றவர்கள் மீண்டும் அவர்களை பிடித்து விரட்டிவிட்டனர். காலை முதல் மாலை வரை இதுேபான்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறியவண்ணம் இருந்தது.

போதை ஆசாமிகள் அத்துமீறும் செயல் இங்கு குளிக்க வந்த பெண்களை அதிருப்தியடைய செய்துள்ளது. அருவியில் எல்லை மீறும் செயலை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுேபால் ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டி பாலத்திலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

பாலத்தின் இரு பக்கமும் வாகனம் நிறுத்த வசதி இல்லாததால் குறுகிய சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் உள்ளே சென்ற வாகனங்கள் திரும்பி வர முடியாத நிைல ஏற்பட்டது. பயணிகள் நீண்ட தூரம் நடந்து சென்று பாலத்தில் நின்று இயற்கை அழகை ரசித்தனர்.

Tags : Youths ,
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...