×

நாகர்கோவில் அருகே ராட்சத அலை இழுத்து சென்ற கல்லூரி மாணவர் பலி உடல் கரை ஒதுங்கியது

நாகர்கோவில், மே 14:  நாகர்கோவில் அருகே கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பலியானார். அவரது உடல் நேற்று கரை ஒதுங்கியது. மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் கிருஷ்ணகுமார் (19).  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் விக்னேஷ் (21). இவரும் மதுரையில் தான் வசித்து வருகிறார். கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக கிருஷ்ணகுமார் மற்றும் விக்னேஷ் உள்பட அவரது நண்பர்கள் 14 பேர் நேற்று முன் தினம்  காலை கன்னியாகுமரி வந்தனர். கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்து விட்டு, நாகர்கோவில் அடுத்த கணபதிபுரம் பரமன்விளையில் உள்ள விக்னேசின் மாமா பாபு வீட்டுக்கு வந்தனர்.

அங்கு காலை சாப்பாடு முடிந்ததும் நண்பர்கள் அனைவரும் ராஜாக்கமங்கலம் ஆயிரங்கால் பொழிமுகம் கடற்கரைக்கு சென்றனர். இந்த பகுதியில் எப்போதுமே அலை வேகமாக இருக்கும். கடல் அழகை ரசித்தவர்கள் திடீரென கடலுக்குள் இறங்கி குளிக்க தொடங்கினர். இதில் கிருஷ்ணகுமார், அவருடன் வந்த நண்பர்கள் நாராயணகுமார் (19), சிவநாத் (19), சுதர்சன் (21) ஆகியோரை கடல் அலை இழுத்து சென்றது. இதில்  கிருஷ்ணகுமார் தவிர மற்ற 3  பேர் மீட்கப்பட்டனர். கிருஷ்ணகுமாரை தேடும் பணி நடந்தது. ஆனால் போதிய வெளிச்சம் இல்லாமல் நேற்று முன் தினம் இரவு தேடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

நேற்று காலையில் இருந்து 2 வது நாளாக மீண்டும் தேடும் பணி நடந்தது. தனியார் படகில் மீனவர்கள் உதவியுடன் தேடும் பணி தொடங்கியது. தூத்துக்குடியில் இருந்து கப்பற்படைக்கு சொந்தமான படகும் வரவழைக்கப்பட்டு தேடினர்.  இந்த நிலையில் நேற்று மாலை ராஜாக்கமங்கலம் துறை கடல் பகுதியில் வாலிபர் சடலம் மிதப்பதாக குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்ஸ்லி கிறிஸ்டோபர், ஏட்டு சுரேந்தரகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கிருஷ்ணகுமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரவழைக்கப்பட்டு உடலை காட்டினர். அவர்கள் அது கடலில் இழுத்து செல்லப்பட்ட கிருஷ்ணகுமார்  தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கிருஷ்ணகுமாரின் உடலை  பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலுக்குள் மூழ்கிய சிறிது நேரத்திலேயே மூச்சு திணறி கிருஷ்ணகுமார் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : college student ,gorge ,Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை