×

கோவில்பட்டி எட்டயபுரம் வளைவு ரோட்டில் தானியங்கி சிக்னல் அமைக்கப்படுமா?

கோவில்பட்டி, மே 14: கோவில்பட்டி நகரில் எம்எல்ஏ அலுவலகம் அருகே உள்ள எட்டயபுரம் வளைவு ரோட்டில் 4 ரோடுகள் சந்திக்கும் ஜங்ஷன் உள்ளது. கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி, எட்டயபுரம், விளாத்திகுளம், திருச்செந்தூர், ராமேஸ்வரம், கீழஈரால் மற்றும் இங்கிருந்து மறுமார்க்கமாகவும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், வேன்கள், தீப்பெட்டி ஆலை வேன்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார்கள் இந்த சந்திப்பை கடந்து செல்கின்றன.

இந்த ஜங்ஷன் அருகில் அரசு நூலகம், மண்ணென்ணெய் குடோன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், தாலுகாஅலுவலகம், அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, கோர்ட்டுகள், ஆர்.டி.ஓ.அலுவலகம், கிளைசிறை, பிஎஸ்என்எல் அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தலைமை தபால்நிலையம், வணிக வரி அலுவலகம் போன்றவைகள் உள்ளன. இந்த ஜங்ஷனில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சாலைகளை கடந்து செல்லும் வகையில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை.

சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு விசாலமாக உள்ளதால் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக ஜங்ஷன் வளைவுகளில் கடந்து செல்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. இந்த ஜங்ஷனில் டிராபிக் போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், அதிக வாகனங்கள் வரும்போது போக்குவரத்துகளை ஒழுங்கு செய்வதில் சிரமநிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர், பெண்கள் மற்றும் முதியோர் ரோட்டை பீதியுடன் கடக்க வேண்டியுள்ளது.

சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் இந்த சந்திப்பில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் விபத்துக்கள் நேரிடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. விபத்துக்களை தடுக்கும் வகையில் கோவில்பட்டி எட்டயபுரம் வளைவு ரோடு சந்திப்பில் தானியங்கி சிக்னல் விளக்குகள் அமைப்பதோடு, வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் ரவுண்டா வசதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : curve road ,Kovilpatti Ettayapuram ,
× RELATED மருந்து கடைக்காரரை மிரட்டிய...