×

நெல்லை மாவட்டத்தில் உளுந்து சாகுபடி தீவிரம்

நெல்லை, மே 14:  நெல்லை மாவட்டத்தில் முன்கார் சாகுபடியில் உளுந்து சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. சில இடங்களில் அறுவடை முடிந்து உளுந்துக்கேற்ற விலையில்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடி முடிந்தபிறகு, கோடை காலங்களில் உளுந்து  சாகுபடி ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். முன்கார் சாகுபடி எனப்படும் கார் பருவத்திற்கு முந்தைய சாகுபடியில் தற்போது நெல்லை சுற்றுவட்டாரங்களான கண்டியப்பேரி, ராமையன்பட்டி, அருகன்குளம், சேந்திமங்கலம், மானூர், தாழையூத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உளுந்து சாகுபடி நடந்து வருகிறது.

டவுன் சுற்றுவட்டாரங்களில் நாட்டு உளுந்தையும், மானூர் வட்டாரங்களில் வம்பன் 5, 6, 7 ரக உளுந்தையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதிகளில் வம்பன் வகை உளுந்துக்கு மஞ்சள் நோய் வராது என்பதால் அதிகப்படியாக பயிரிட்டு வருகின்றனர்.
உளுந்து சாகுபடியில் ஒரு எக்டேருக்கு 250 முதல் 300 கிலோ கிடைப்பதே சிறந்ததாகும். அருகன்குளம் சுற்றுவட்டாரங்களில் தற்போது உளுந்து அறுவடை பருவத்தில் உள்ளது.  உளுந்தில் முதிர்ந்த காய்களை பறித்து உலர்த்தி பிரித்தெடுத்து வருகின்றனர். சில இடங்களில் கூலியாட்கள் மூலம் உளுந்து செடியை பிடுங்கி சாலைகளில் போட்டு அடித்து பிரித்தெடுக்கின்றனர்.

உளுந்து தற்போது ஒரு கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உளுந்து சாகுபடி அதிகரிக்கும் சூழலில், போதிய விலை இல்லை என விவசாயிகள் குறைப்பட்டு கொள்கின்றனர். ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 விற்றால் லாபம் கிடைக்கும் என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஊத்துமலை உளுந்து விவசாயி குட்டித்துரை கூறுகையில், ‘‘குறைந்த தண்ணீரே போதும் என்பதால் உளுந்து விதைத்துள்ளோம்.

80 நாளில் அறுவடைக்கு வந்துவிடும் என்பதால் பயிரிடும் காலமும் உளுந்து பயிருக்கு குறைவு. நாட்டு உளுந்தில் குலை அதிகமிருந்தாலும், காய்கள் குறைவாகவே உள்ளன. எனவே வம்பன் வகை உளுந்துகளை பயிரிட்டு அதிக நெத்துக்களை பறித்து வருகிறோம். ஒரு கிலோ உளுந்துக்கு ரூ.60 விலை என்பது மிக குறைவாகும். விலை அதிரிக்கும் வரை இருப்பு வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்’’ என்றார்.

Tags : district ,Nellai ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...