×

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா 17ம் தேதி தொடங்குகிறது

திசையன்விளை, மே 14:   தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்திப் பெற்ற சிவஸ்தலங்களில் முக்கியமானது உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில். கடற்கரையில் அமைந்த இக்கோயில், பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது. சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் பக்தர்கள் நேர்ச்சையாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் கடலில் பிளாப் பெட்டிகளில் மணல் எடுத்து, அதனை தலையில் சுமந்து கரையில் சேர்ப்பர். இத்தகைய நேர்ச்சை தமிழகத்தில் இங்கு மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் மூலவரை சூரியக்கதிர்கள் அபிஷேகம் செய்யும் அபூர்வ நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா, வருகிற 17ம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்று காலை அபிஷேகம் மற்றும் பூஜைகளும், மாலையில்  அம்பை மணிமுருகனின் நல்ல குணத்தில் எதிரி என்ற தலைப்பில் சொற்பொழிவும்,  இருளப்பபுரம் சிவஅருள்நெறி திருக்கூட்டத்தாரின் தேவார இன்னிசையும், இரவு 9 மணிக்கு  பாடகி ரபினாவின் சுபராகம் வில்லிசையும் நடக்கிறது.

18ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறப்பு, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட சிறப்பு பூஜை, காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிகால சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 5 மணிக்கு பூதப்பாண்டி குமார் நாதஸ்வரம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சாயரட்சை சிறப்பு பூஜை, தொடர்ந்து நல்ல வண்ணம் வாழலாம் என்ற தலைப்பில் அம்பை மணிமுருகன், அன்பே சிவம் என்ற தலைப்பில் வி.கே.புரம் பாரதி கண்ணன், சிவலிங்கத்தின் பெருமை என்ற தலைப்பில் ஜோதி ராமலிங்கம் ஆகியோரின் சமய சொற்பொழிவு நடக்கிறது.

இரவு 8.30 மணிக்கு ராக்கால பூஜை, இரவு 10 மணிக்கு எஸ்.ஆர்.சந்திரனின் ஸ்டார்நைட் பக்தி மெல்லிசை, இரவு 2 மணிக்கு சுவாமி பூங்கோவில் சப்பரத்தில் எழுந்தருளி, மேளதாளம் வாணவேடிக்கை முழங்க வீதி உலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.

Tags : UV Swayambulangi Swami Temple ,Vizag Festival ,
× RELATED உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில்...