×

தாழையூத்தில் நிழற்குடையின்றி வெயிலில் காயும் பொதுமக்கள்

தாழையூத்து, மே 14: நெல்லை அடுத்துள்ள தாழையூத்து, பல கிராமங்களை இணைக்கும் முக்கிய பகுதியாகும். நெல்லை - மதுரை நான்குவழிச்சாலையால் இரண்டாக பிரிக்கப்பட்டது. இருபுறமும் சர்வீஸ் ரோடு போடப்பட்டுள்ள நிலையில், மதுரை செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில், தினகரன் செய்தி எதிரொலியாக சங்கர்நகர் பேரூராட்சி சார்பில் கடந்த 2015ம் ஆண்டு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.

ஆனால் மதுரையில் இருந்து நெல்லைக்கு வரும் வெளியூர் மற்றும் உள்ளூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் பயணிகள் நிழற்குடை இதுவரையிலும் அமைக்கப்படவில்லை. நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குட்பட்ட இந்த பகுதியில் பேரூராட்சியில் இருந்தும் நிழற்குடை கட்டப்படவில்லை. நான்குவழிசாலை அணுகுசாலையில் அமைக்கப்படும் நிழற்குடையும் இல்லை. இதனால் தாழையூத்து மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நெல்லை செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முதியோர், பெண்கள், குழந்தைகள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாக்கின்றனர். நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் அருகில் உள்ள கடைகளில் ஒதுங்குவதால் வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். சிலர் பயணிகளை விரட்டிவிடும் அவல நிலையும் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்னையில் தலையிட்டு, பயணிகளின் நலன் கருதி, தாழையூத்து, நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குட்பட்டதும், நான்குவழி சாலையின் கிழக்கு பகுதியுமான பஜார் பகுதியில் நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : backyard ,
× RELATED ஆயுர்வேத கல்லூரி பின்வாசல் பகுதிக்கு...