×

அமராவதி ஆற்றில் தொடரும் மணல் திருட்டு

திருப்பூர்,மே14:அமராவதி ஆற்றில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மணல் இருப்பை ஆர்.டி.ஒ. கண்டுபிடித்து பறிமுதல் செய்து சில நாட்களே ஆனநிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் துணையுடன் தொடரும் மணல் திருட்டால் 27 கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் பயனடையும் 245 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர்  அமராவதி ஆற்றின் மூலம் கல்லாபுரம், மடத்துக்குளம், கணியூர், தளவாய்பட்டணம், அலங்கியம், தாராபுரம், தாளக்கரை, ஆத்துக்கால்புதுார், கொளத்துப்பாளையம், மூலனுார், அக்கரைப்பாளையம், சின்னதாராபுரம் வழியாக கருர் காவிரி ஆற்றில் கலக்கிறது. அமராவதி பழைய, புது ஆயக்கட்டு பாசன வாய்க்கால் மூலம் 57 ஆயிரத்து 345 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதிபெறுகிறது.


 27 கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 245 கிராமங்களுக்கு குடிநீர் தேவையை உள்ளாட்சி அமைப்புகள் பூர்த்திசெய்கிறது.இந்நிலையில், அமராவதி ஆற்றில் ஒரு சிலர் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் மூட்டைகளாக கட்டி மணல் கடத்தி வந்தனர். அதன் பின் ஆளும்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு லாரிகளில் மணல் கடத்தல் ஜோராக நடக்கிறது. அமராவதி ஆற்றில் தொடர் மணல் திருட்டால் பாறை பிரதேசமாக மாறியுள்ளதால் 27 கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் பயனடையும் 245 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. கடந்த 2004 ம் ஆண்டு வெள்ளக்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன், முன்னாள் எம்.பி. கார்வேந்தன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, ஈஸ்வரமூர்த்தி உட்பட பல்வேறு விவசாய அமைப்புகள், பொது மக்கள் சார்பில் அக்கரைப்பாளையம் அமராவதி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட  ஜே.சி.பி. மற்றும் 20 க்கு மேற்பட்ட மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.



முன்னாள் அமைச்சர் சாமிநாதன்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அமராவதி ஆற்றில் மணல் எடுக்க தடை உத்தரவு வாங்கினார். மணல் எடுத்த தடை உத்தரவு நீடித்து வரும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு  மேலாக தளவாய்ப்பட்டணம், அலங்கியம், தாராபுரம், தாளக்கரை, அக்கரைபாளையம், பெரமியம். போளரை உட்பட பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் லாரிகளில் மணல் எடுக்கப்படுகிறது. தாராபுரம், பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை, கேரளா ஆகிய பகுதிகளில் விற்பனைக்காக தினமும் 50க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் செல்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.


 உடுமலை அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக அவ்வப்போது தண்ணீர் திறப்பது வழக்கம். அமராவதி ஆற்றின் வழியாக கரூர் வரை தண்ணீர் சென்ற பின் அணையிலிருந்து  தண்ணீர் திறப்பை நிறுத்துகின்றனர். அமராவதி ஆற்றில் படிந்துள்ள மணல் தண்ணீரை உறிஞ்சி வைத்து சில மாதங்களுக்கு 27 கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயனடையும் 245 கிராமங்களுக்கு சிறிது குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தற்போது அமராவதி ஆற்றில் தொடரும் மணல் கொள்ளையால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சப்.கலெக்டர் ஆய்வு நடத்திய பின்னரும் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருவது சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அமராவதி ஆறு பாதுகாப்பு பாசன விவசாயிகள் சங்கத்தின்  செயலாளர் நாட்டுத்துரை கூறியதாவது. அமராவதி ஆற்றில் மணல் எடுக்க தடை உத்தரவு இருந்தும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஒரு சிலர் லாரிகளில் மணல் எடுத்து வருவது வேதனையளிக்கிறது. தற்போதைய மாவட்ட கலெக்டர் விவசாய குடும்பத்தை சார்ந்தவர் தண்ணீர் இன்றி விவசாயிகள்,பொது மக்கள் படும் துயரங்களை  நன்கு அறிந்தவர். அமராவதி ஆற்றிலுள்ள மணலை பாதுகாக்க மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : river ,Amaravathi ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை