ஊட்டியில் மழை தொடர்வதால் மலர் அலங்காரம் பாதிக்கும் அபாயம்

ஊட்டி,  மே 14:  ஊட்டியில் மேக மூட்டம் மற்றும் மழை பெய்து வருவதால், மலர்  கண்காட்சி அலங்கார பணிகளில் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தில் தோட்டக்கலை  துறையினர் உள்ளனர். கோடை விடுமுறையை முன்னிட்டு மே 1ம் தேதி முதல்  ஊட்டியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட துவங்கி விட்டனர். கடந்த சில  நாட்களாகவே ஊட்டியில் மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. நேற்று காலை முதலே மேக  மூட்டம் காணப்பட்டது. கடந்த 15 நாட்களாக அவ்வப்போது ஊட்டியில் மழை பெய்து  வருகிறது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது ஊட்டியில் மிதமான  காலநிலை நிலவுகிறது. மலர் கண்காட்சிக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில்,  தற்போது அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


  தாவரவியல்  பூங்காவில் உள்ள புதுப்பூங்கா, மாடங்கள் மற்றும் சிறிய புல் மைதானங்களில்  தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளன.  தற்போது ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில், பிளாஸ்டிக் போர்வை கொண்டு  இந்த மலர் செடிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நேற்றும் மழை பெய்தது.  மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் பாதிக்க வாய்ப்பில்லை, அதே சமயம்  தொடர்ந்து மழை பெய்தால், கண்காட்சிக்கான அலங்கார பணிகள் பாதிக்க  வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி மலர்கள் உதிரவும் வாய்ப்புள்ளது. இதனால், கண்காட்சி பொலிவிழக்க வாய்ப்புள்ளது. மழையால், மலர் கண்காட்சி  அலங்கார பணிகள் பாதிக்கும் அச்சத்தில் தோட்டக்கலை துறையினர் உள்ளனர். அதே  சமயம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருவதால்  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED தொடர் மழையால் மலர் அலங்காரம் பாதிக்கும் அபாயம்