×

ஆம்பூர் அருகே வன விலங்குகளுக்கான குடிநீர் தொட்டியை சீரமைத்து தண்ணீர் நிரப்பிய கிராம இளைஞர்கள் சொந்த செலவில் செய்து அசத்தினர்

ஆம்பூர், மே 14: ஆம்பூர் அருகே வன விலங்குகளுக்கான குடிநீர் தொட்டியை கிராம இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் சீரமைத்து குடிநீர் நிரப்பியுள்ள சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆம்பூர் வனப்பகுதியில் நீர்நிலைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் தண்ணீரின்றி காய்ந்த நிலையில் குடிநீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி மக்கள் வசிப்பிடத்தை நோக்கி வரத்துவங்கியுள்ளன. தற்போது கத்திரி வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வரும் நிலையில் மான்கள் அதிக எண்ணிக்கையில் ஆம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றன.
 

அவை தண்ணீரை தேடி நகரம் மற்றும் கிராமங்களில் மக்கள் வசிப்பிடத்திற்கு வரும் போது நாய்கள் கடித்துக் குதறியும், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி உயிரிழக்கும் பரிதாப நிலை இருந்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் தண்ணீருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்பூர் நகரை சேர்ந்த தீனதயாளன் மற்றும் யுவராஜ் ஆகிய இரு இளைஞர்கள் ஆம்பூர் கம்பிக்கொல்லை வனப்பகுதியில் வனத்துறையால் ஏற்கனவே அமைக்கப்பட்டு சேதமடைந்திருந்த வன விலங்குகளுக்கான குடிநீர் சேமிக்கும் தொட்டியை தங்களுடைய சொந்த செலவில் கட்டிட தொழிலாளர்களுடன் இணைந்து சீரமைத்து தண்ணீரை நிரப்பியுள்ளனர்.


இதன் மூலம் அப்பகுதியில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி காட்டை விட்டு மக்கள் வசிப்பிடங்களுக்கு வருவது தவிர்க்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்த அந்த இளைஞர்களை வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Ampoor ,
× RELATED ஆம்பூர், குடியாத்தத்தில் பரபரப்பு ...