×

நாட்றம்பள்ளி அருகே போலி ஆலையில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு போலி மதுபாட்டில் சப்ளை

* பரபரப்பு தகவல்கள் அம்பலம் * மாநில அரசுக்கு வருவாய் இழப்பு

திருப்பத்தூர், மே 14: நாட்றம்பள்ளி அருகே செயல்பட்ட போலி மதுபான ஆலையில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு போலி மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதிக்கு கடத்தி சென்று விற்பதாக மத்திய புலனாய்வு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கடந்த 11ம் தேதி நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி ஏரியூர் பகுதியில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக கட்டியிருந்த குடோனில் சோதனை நடத்தினர். அப்போது, குடோனில் இருந்த பாதாள அறையில் போலி மதுபான ஆலை இயங்கி வந்தது தெரியவந்தது.  

பின்னர் போலீசார் அங்கிருந்த காலி பாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் மீது ஒட்டுவதற்கான போலி ஹோலோகிராம் ஸ்டிக்கர்கள் மற்றும் 720 போலி குவாட்டர் பாட்டில்கள் உட்பட ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருப்பத்தூர் அடுத்த கும்மிடிகன்பட்டி கிராமத்தை சேர்ந்த மனோகரன்(25), கோவிந்தராஜ்(60), சரவணன்(36) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சிலரை இந்த போலி மதுபாட்டில் தயாரித்த கும்பல் புரோக்கர்களாக பயன்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அரசு டாஸ்மாக் கடைகளிலேயே போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


இதுதவிர திருப்பத்தூர், குரிசிலாப்பட்டு, கந்திலி, ஜோலார்பேட்டை, சுந்தரம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் ஒரு சில ஓட்டல்கள், பெட்டி கடைகள், அரசு டாஸ்மாக் கடைகளிலும் போலி மதுபாட்டில்கள் 24 மணிநேரமும் விற்பனை செய்யப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற போலி மதுபாட்டில்கள் விற்பனையில் டாஸ்மாக் அதிகாரிகள், சூப்பர்வைசர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கைதான 3 பேரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ‘₹100 மதிப்புள்ள குவாட்டர் பாட்டில்களை போலியாக தயாரித்து ₹35க்கு சப்ளை செய்தோம்’ என்று வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


இந்நிலையில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு போலி மதுபானம் விற்பனையில் தொடர்பு இருப்பதால் அடுத்தகட்ட விசாரணை நடத்துவதில் போலீசார் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கடந்த 4 மாதங்களாக நடந்த விற்பனை விவரங்கள் குறித்து தனியாக குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பதே குடிமகன்களின் கோரிக்கை.
மேலும் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் போலிகள் இல்லை என்பதை உறுதி செய்ய மதுபாட்டில் வாங்கும் அனைவருக்கும் ரசீது வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாக்ஸ்.....


ஆய்வு பெயரில் வசூலிக்கும் அதிகாரிகள்


டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? முறைகேடுகள் நடக்கிறதா? என்பதை கண்காணித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆய்வு செய்வதாக அதிகாரிகள் குழுவினர் ஊழியர்களிடமே வசூல் செய்கிறார்களாம். அதிகாரிகளுக்கு ெகாடுக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் குடிமகன்களிடம் போராடி கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், போலி மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்திலும் அதிகாரிகள் பல லட்சங்களை சுருட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனையில் விதிமுறைகள் முறையாக பின்பற்றுவதில் மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Tags : factory ,shops ,Natrampalli ,Tasmag ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி