×

கம்பம் பள்ளத்தாக்கில் கயிறு உற்பத்தியை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

உத்தமபாளையம், மே 14: கம்பம் பள்ளத்தாக்கில் கயிறு உற்பத்தியை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கில் சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, உள்ளிட்ட ஊர்களைச் சுற்றிலும் பலஆயிரம் ஏக்கர் பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது.

இங்கு விளையக்கூடிய தேங்காய் கொப்பரைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இவை ஒரு காலத்தில் பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது தேங்காய் உற்பத்தி குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தென்னை விவசாயத்தின்போது இதன் உபதொழிலாக உள்ள தென்னை நார்களின் மூலமாக கயிறு உற்பத்தியும் நடக்கும். தற்போது மழைஇல்லாத நிலையில் தென்னை உற்பத்தியில் சரிவு உண்டாகி உள்ளது. இதனால் கயிறு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதில்லை.

தென்னை நார் போன்றவை கிடைக்காதநிலையில் இதனை வைத்துள்ளவர்கள் ஆர்டர்களை கூட அனுப்ப முடியாத நிலையில் திண்டாடி வருகின்றனர். இதனால் கூலித்தொழிலாளர்களுக்கும் வேலை குறைந்துள்ளது. தேங்காய் வெட்டி வியாபாரத்திற்கு வந்தால் கூட சரியான விளைச்சல் இல்லாத நிலையில் நார் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

இதனைப் போக்கிட தமிழக அரசு தேவையான ஊக்குவிப்பை அதிகரிக்க வேண்டும். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், `` கம்பம் பள்ளத்தாக்கில் அதிக அளவில் விளையக்கூடிய தேங்காயை வைத்து இதன் உபரிதொழிலாக உள்ள கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, இத்தொழில் நசிவடையாமல் இருக்க தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : government ,Pole Valley ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...