×

பண்ணைப்புரம் நெடுஞ்சாலையில் நிழற்குடைகளில் நிற்காத பஸ்கள் கவனிக்குமா காவல்துறை?

தேவாரம், மே 14: பண்ணைப்புரம் பேரூராட்சியில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் நிழற்குடைகளை பொதுமக்கள் பயன்படுத்திட வசதியாக பஸ்களை நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பண்ணைப்புரம் பேரூராட்சியில் சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதற்கு பக்கத்திலேயே பல்லவராயன்பட்டி, மேலசிந்தலைசேரி, கீழசிந்தலைசேரி உள்ளிட்ட கிராமங்கள் செல்வதால் பண்ணைப்புரம் மாநில நெடுஞ்சாலை வழியே அதிகமான வாகனங்கள் செல்கின்றன.

இதேபோல் தேவாரம் - போடி மாநிலநெடுஞ்சாலையும் கிராமங்களை இணைக்கின்றன. இதனால் பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து நிழற்குடைகள் கட்டப்பட்டன. இங்கு தான் பஸ்கள் வந்து செல்லவேண்டும். ஆனால் தேவாரம், போடி, பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் இங்கு நிற்பதில்லை. மாறாக மிக தூரமாக நிற்பதால் மழை, வெயில் காலங்களில் மக்கள் திண்டாடுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள், வயதானவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதற்கு மாலை நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நிற்கக்கூடிய போலீசார், பஸ்களை நிழற்குடையின் அருகே நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இங்கு கட்டப்பட்டுள்ள நிழற்குடைகள் பயனற்றதாகிவிடும். அதில் இரவுநேரங்களில் சமூகவிரோத கும்பல்கள் தங்குவதற்கு வசதியாக அமைந்துவிடும்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` பொதுமக்களின் வசதிக்காக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து நிழற்குடைகள் பயன்பாடே இல்லாமல் கிடக்கிறது. காரணம் இங்கு எந்த பஸ்சும் நிற்பதில்லை. நிழற்குடையில் இருந்து மிக தூரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும், இறக்குவதும் நடக்கிறது. இப்படியே சென்றால் மிக மோசமான நிலைக்கு நிழற்குடைகளின் நிலை சென்றுவிடும். எனவே, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘’ என்றனர்.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு