×

தம்பிக்கோட்டை பகுதியில் கஜா புயல் பாதிப்பு தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் வந்து சேராத அவலம் ஆளுங்கட்சியினர் துணையுடன் அதிகாரிகள் பல கோடி மோசடி

முத்துப்பேட்டை, மே 14: முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ஆறு மாதமாகியும் நிவாரணம் வந்து சேரவில்லை. நிவாரண நிதியில் ஆளுங்கட்சியினரின் துணையுடன் அதிகாரிகள் பலகோடி மோசடி செய்துள்ளனர். இது குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சமீபத்தில் தாக்கிய கஜா புயலின் கோரதாண்டவத்தால் இப்பகுதி மக்கள் தங்களது வீடுகள், உடமைகள் ஆகியவைகளை இழந்ததுடன் தங்களது வாழ்வாதாரங்களையும் இழந்து இன்னும் பரிதவித்து வருகின்றனர். இதில் தென்னை மரங்கள் லட்சக்கணக்கானவை அடியோடு சாய்ந்தது. இந்நிலையில் தென்னை விவசாயிகள் என்ற பெயரில் மரங்களே இல்லாத நிலங்களை காட்டி ஆளுங்கட்சியினரின் துணையுடன் கமிஷன் பெற்றுக் கொண்டு வேளாண்மை துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களுக்கு பல லட்சங்களை வாரி வழங்கி உள்ளனர்.


ஒன்றியம் முழுவதும் 29 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பரவலாக நிவாரணம் கிடைக்காமல் உள்ளனர். அதேபோல் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் இதுநாள்வரை நிவாரணம் கிடைக்காமல் உண்மையில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் உள்ளனர். முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை பகுதி தமிழகத்தில் தென்னை சாகுபடியில் முதலிடத்தில் உள்ளது. இந்த பகுதியில் தென்னை விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் லட்சக்கணக்கான மரங்களை பராமரித்து வந்தனர். தேங்காய்களை வெளிமாநிலம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்து வந்தனர். இந்நிலையில் கஜா புயல் இப்பகுதியில் உள்ள தென்னை மரங்களையும் விட்டு வைக்காமல் அடியோடு சாய்த்தது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான தென்னை விவசாயிகளுக்கு கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு ஆறுமாதங்களை கடந்தும் இன்னும் உரிய நிவாரணம் வந்து சேரவில்லை. அதேநேரத்தில் தென்னை மரங்களே இல்லாதவர்களும், சவுக்கு ஆர்எஸ் பதி ஆகியவை சாகுபடி செய்தவர்களும் நிவாரணம் பெற்றுள்ளனர். இப்பகுதி ஆளுங்கட்சியினர் துணையுடன் அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டு இந்த பாகுபாட்டில் ஈடுபட்டதுடன் பல கோடி ரூபாய் மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்.


அரசின் நிவாரணம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற ஆதங்கத்தில் புயலில் விழுந்த மரங்களை அகற்றாமல் அப்படியே போட்டு வைத்துள்ளனர். இதற்கு தமிழக அரசு உரிய விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தி ஆளுங்கட்சியினரின் துணையுடன் பலகோடி மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இப்பகுதி தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் கூறியது: தர்மலிங்கம்:  எனக்கு சொந்தமான 3 ஏக்கர் பட்டா நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் 176 மரங்கள் விழுந்துள்ளது. உடன் அதிகாரிகள் கணக்கீடு செய்து சென்றனர். ஆனால் இதுநாள்வரை நிவாரணம் கிடைக்கவில்லை.  அரசு புறம்போக்கு ஏரி குளங்களில் ஆக்கிரமித்த  இடங்களில் உள்ளவர்களுக்கு எல்லாம் தென்னை சாகுபடி செய்ததாக  நிவாரணம் வழங்கிய அரசு எனது சொந்த பட்டா நிலத்தில் விழுந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. இப்பகுதியில் மொத்தம் 380 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படி பார்த்தால் நூறு விவசாயிகள் பெயரை போலியாக தயாரித்து நிவாரணம் பெற்றுள்ளனர். இதற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் விரைவில் நீதிமன்றத்தை நாட இருக்கிறேன்.
சிவராமன்: நான் ஒரு ஏக்கரில் தென்னை மரம் பராமரித்து வந்தேன். எனக்கு தென்னை மரம் தான் வாழ்வாதாரமாக இருந்தது. கஜா புயலில் நூறு மரங்களை இழந்தேன். ஆனால் இதுநாள்வரை எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. தென்னை மரமே இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைத்து விட்டது. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட என்னை போன்றவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அரசு இதற்கு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.


மதன்: நான் 2 ஏக்கரில் தென்னை வளர்த்து வந்தேன். புயலில் எனது 85 மரங்கள் அடியோடு சாய்ந்தது. ஆனால் நிவாரணம் கிடைக்கவில்லை. நிவாரணத்தில் முக்கிய பிரமுகர்கள் உதவியுடன் பல கோடி மோசடி நடந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளம்பர் பாரதி: எனது வீட்டின் அருகில் இருந்த பத்து மரங்கள் அடியோடு சாய்ந்தது. அதேபோல் புயலில் எனது வீடும் சேதமானது. ஆனால் எங்களுக்கு தென்னை நிவாரணமோ வீட்டு நிவாரணமோ எதுவும் வரவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் வரும் என்கிறார்கள் ஆனால் இதுநாள்வரை வரவில்லை. மொத்தத்தில் இப்பகுதியில் தென்னை நிவாரணம் மட்டுமல்ல அனைத்து நிவாரணம் வழங்கியதிலும் பல கோடி மோசடி நடந்துள்ளது. பல முறை இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி விட்டனர். அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று விரைவில் முடிவு எடுக்க இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : area ,Kappa ,Tampikkottai ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...