×

இ ந் த நா ள் பயணிகள் வருகை அதிகரிப்பு மூக்கையூரை சுற்றுலா தலமாக்க வலியுறுத்தல்

சாயல்குடி, மே 14: சாயல்குடி அருகே இயற்கை அழகு நிறைந்த மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் உள்ள கடற்கரையை சுற்றுலா தலமாக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி அருகே மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய அரசு ரூ.113.90 கோடி நிதியை ஒதுக்கி, எஞ்சிய ரூ.56.95 கோடியை தமிழக அரசு பங்கு தொகையாக போட்டு பணியை துவங்க ஒப்புதல் கொடுத்தது. இதனையடுத்து மூக்கையூரில் கடந்த 2017 மார்ச் மாதம் தனியார் கட்டுமானம் நிறுவனம் துறைமுகத்திற்கான முதற்கட்ட பணிகளை துவங்கியது. 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. பணிகள் முழுமையடையாமல் தற்போது வரை பணிகள் நடந்து வருகிறது.

கடற்கரையிலிருந்து, கடல் மட்டத்தோடு சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு aபாறை கற்களை போட்டு பாதை அமைக்கப்பட்டு, படகுகள் நிறுத்தும் தளம், வலை பின்னுதல், உலர்த்துதல், மீன் ஏலக்கூடம், ஓய்வறை, உலர்களம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளது. சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் இரண்டு பக்க மணல்மேடு, செயற்கை அலை தடுப்பு கற்களால் நிரப்பப்பட்டுள்ளது. தூண்டில் வளைவுபோன்று அமைந்துள்ளது. ஒரு பக்கம் ஆக்ரோசமான அலையும், மற்றொரு பக்கம் அமைதியான சூழலில், இரண்டு பக்கம் கடலால் சூழப்பட்டு பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது. இதனால் அதிகளவில் சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.

இக்கடற்கரை மிக ஆழமான பகுதி என்பதால் மீன்பிடித் தொழில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் கடற்கரையில் ஓய்வு நேரங்களில், மீனவர்கள் வலை உலர்த்துதல், பின்னுதல், மீன் காயப்போடுதல், படகுகளை பழுது பார்த்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இதன் அருகே சமுதாய நல்லிணக்கத்திற்கு உதாரணமாக விளங்கக் கூடிய பழமையான தேவாலயம், இருளப்பசாமி கோயில் உள்ளது. இதனால் உள்ளூர், வெளியூர் மற்றும் கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அருகிலிருக்கும் விருதுநகர், சிவகங்கை, மதுரை மாவட்டத்தின் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ‘

எனவே இப்பகுதியை சுற்றுலாதலமாக்கி படகு போக்குவரத்து உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மூக்கையூர் கிராமமக்கள் கூறும்போது, எழில்கொஞ்சும் இயற்கை கடற்கரையில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளதால் தற்போது பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடற்கரையில் தெருவிளக்கு, குடிநீர், கழிவறை வசதிகள் கிடையாது. கடற்கரையில் கடற்புல் கழிவுகள் ஒதுங்குவதால், குப்பை அதிகமாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரகேடு நிலவுகிறது. இதனால் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலத்தவர் முகம் சுழிக்கின்றனர்.

கடற்கரையில் சிறுவர்கள் பூங்கா, அமர்ந்து ரசிக்க கடற்கரையோரங்களில் இருக்கை வசதிகள், மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பிட்ட தொலைவிற்கு சென்று வர படகு போக்குவரத்து செய்ய வேண்டும். எனவே மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தை சுற்றுலாதலமாக அரசு அறிவிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறைமுகம் அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘துறைமுகம் மீன்வளத்துறையிலும், கடல் மன்னார்வளைகுடா உயிர்கோள பாதுகாப்புத் துறையின் கட்டுபாட்டின் கீழ் வருகிறது. கடற்கரை ஊராட்சி நிர்வாகத்தில் உள்ளது. எனவே மூன்று துறை அதிகாரிகளை இணைத்து, மத்திய,மாநில அரசுகளின் அனுமதியை முறையாக பெற்று சுற்றுலா தலமாக்கும் நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தால் அரசு கவனிக்கும்’ என்றார்.

Tags : travelers ,arrival ,country ,
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...