×

விவசாயிகள் கலெக்டரிடம் மனு ஊராட்சி நிதிகள் முடக்கம் முகநூலில் மூழ்க வைத்தவர்3

‘‘பொழுது போகலை... போரடிக்குதுப்பா...அப்படியே பேஸ்புக்  பக்கம் போய்ட்டு வருவோம்’’ என்பவர்கள் பலர் இருக்கிறார்கள். பொழுது முழுவதும் பேஸ்புக்கிலே உட்கார்ந்து நேரத்தை கழிப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஒரு இரட்டை சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் ஒரு 35 வயது இளைஞர். அவர் பெயர்தான் மார்க் எலியட்  ஜூக்கர்பெர்க். பேஸ்புக்கின் நிறுவனர்.

மார்க் என பேஸ்புக் பயனாளிகளால் செல்லமாக அழைக்கப்படும் இவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பாலோஅல்டோ நகரில் மே 14(அதாங்க இன்று), 1984ல் பிறந்தார். அப்பா எட்வர்ட்  ஜூக்கர்பெர்க் ஒரு பல் மருத்துவர். தாய் கரேன் மனநல மருத்துவர். 3 சகோதரிகள்.
உலகம் முழுவதும் 200 கோடி, இந்தியாவில் 20 கோடி பேர் (இந்த கணக்கு ஏறும்... இறங்கும்) வரை பேஸ்புக் பயனாளிகளாக உள்ளனர்.

இதற்காக இவர் கடந்து வந்த பாதையை பார்ப்போமா? பள்ளிப்பருவத்திலேயே தொழில்நுட்ப அறிவுடன் விளங்கினார் மார்க். இவரது 10வது வயதில் இவருக்கு சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் கிடைத்தது. அவ்வளவுதான்... மனிதர் புகுந்து விளையாட துவங்கி விட்டார். அப்போதைய BASIC எனப்படும் கம்ப்யூட்டர் மொழிப்பாடத்தில், நண்பர்களுடன் சாட்டிங் செய்யும் வித்தையை இவர் மாறுபட்ட முறையில் பயன்படுத்தியதை கண்டு சக நண்பர்கள், ஆசிரியர்கள் மூக்கின் மேல் விரலை வைத்தனர்.

படிப்படியாக கம்ப்யூட்டரில் பல அரிய விஷயங்களை கற்று வந்த மார்க், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோது நண்பர்களின் கம்ப்யூட்டர்களை ஒன்றாக இணைத்து, அனைவரும்  தங்களது பாடங்களை, சந்தேகங்களை ஒரே நேரத்தில் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் நெட்வொர்க் முறையில் இணைத்தார். 2003ல் Facemash என்ற உருவாக்கி நண்பர்கள் தங்களது படங்களை போட்டு பயன்படுத்தும் வகையில் ஒரு சாப்ட்வேரை கண்டுபிடித்தார். இப்படி ஜாலியாக கண்டுபிடித்த ஒரு விஷயம், பின்னாளில் உலகையை பிடித்து உலுப்ப போகிறது என மார்க் அன்று உணர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே.

2004, பிப்.4ம் தேதி TheFacebook.com (தி பேஸ்புக்.காம்) என்ற டொமைனை கண்டுபிடித்தார். இதுதான் பேஸ்புக்கின் மூலவர்.  இதற்கு எடுவார்டோ சாவரின் என்ற நண்பரும் மார்க்கிற்கு பக்கபலமாக இருந்தார். துவக்கத்தில் 4 ஆயிரம் பயனாளிகளை கொண்டுதான் தி பேஸ்புக்.காம் இயங்கி  வந்தது. இன்று யோசித்து பாருங்கள். கோடிக்கணக்கில் விரிந்து பரந்திருக்கிறது. புரபைல் படங்கள், கவர் போட்டோ, எழுத்துப்பதிவுகள், பிடித்தமானவருக்கு ஷேர் செய்தல், அதற்கு பின்னூட்டமிடுதல், விருப்பமானவற்றிற்கு லைக் செய்தல், ஷேர் செய்தல் என பேஸ்புக் வளர்ச்சி அடைந்துக் கொண்டே செல்கிறது. சமயத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் சில அப்டேட்கள் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றன.

இதுதான் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க்  ஜூக்கர்பெர்க்கை வைத்திருக்கிறது. ஆம்... இவரது சொத்து இந்திய மதிப்பில் ரூ.5.61 லட்சம் கோடி.  இதெல்லாம் 34 வயதில் எப்படி சாத்தியமானது என்றெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? அதற்கான உழைப்பின் ரகசியம் வேறு ஒன்றுமல்ல... மாத்தி யோசி என்பதுதான். வர்த்தகரீதியான சிந்தனை என்றால் பொருட்கள் மீதுதான் திரும்பும். ஆனால், கோடிக்கணக்கான மக்களின் பொழுதுபோக்கை விற்பனையாக மாற்றும் தந்திரமே,  அவரது பொழுதை வளர்ச்சிகரமாக மாற்றியிருக்கிறது. நீங்களும் மாத்தி யோசியுங்கள். வெற்றி கிடைக்காமலா போய் விடும்.

Tags : petitioners ,
× RELATED அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்