×

பொது விநியோக முறை தொய்வின்றி தொடர நடவடிக்கை நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி வலியுறுத்தல்

தஞ்சை, மே 14: தஞ்சையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஏஐடியூசி தொழிலாளர் சங்க ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் சந்திரகுமார் வேலை அறிக்கை சமர்பித்தார். மாநில பொருளாளர் கோவிந்தராசன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் கொடியேற்றினார். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் இந்தியாவிலேயே முன்னுதாணமான தமிழகத்தின் பொது விநியோக முறையை சீரழிக்கிற முறையிலும், பெற்று வருகிற உரிமைகளை பறிக்கிற வகையிலும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதும் மாநில அரசு துணை போவதும் கண்டிக்கத்தக்கது. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பேரூதவியாக இருக்கிற பொது விநியோக முறை தொய்வின்றி தமிழகத்தில் தொடர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு கடைகள் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் சட்டப்படி சம்பளம் வழங்குவது பொருத்தம் இல்லை. எனவே பணியின் தன்மை பொறுப்பு இயற்கை கணக்கில் கொண்டு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும். கொள்முதல் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு எடை கூலியாக மூட்டை ஒன்றுக்கு ரூ.1.67, ஏற்றுக்கூலியாக ரூ.1.03 என்ற சொற்ப கூலி வழங்கப்படுகிறது. இதே வேலைக்கு தனியாரால் மூட்டைக்கு ரூ.12 வரை கூலி வழங்கப்படுகிறது. எனவே மூட்டைக்கு குறைந்தபட்சம் ரூ.12 கூலி நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.


எவ்வளவு நாட்கள் இருப்பு இருந்தாலும் கொள்முதல் நிலையங்களில் ஏற்படுகிற எடை இழப்பு முழுமைக்கும் கொள்முதல் பணியாளர்களை பொறுப்பாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கிடங்குகள், சேமிப்பு நிலையங்களில் பணிபுரிகிற பணியாளர்கள் அங்கு பொறுப்பேற்றுள்ள காரணத்தாலே எடை குறைவு, தர மாறுபாடு அனைத்திற்கு இவர்கள் பொறுப்பாக்கும் நடைமுறை இயற்கை நீதி கோட்பாடுகளுக்கு விரோதமானது. கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், சட்டப்படியான அகவிலைப்படி 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்கவில்லை. எனவே அகவிலைப்படி நிலுவைத்தொகையை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் புண்ணீஸ்வரன், இணை பொது செயலாளர் குணசேகரன், மாநில செயலாளர் சுப்பிரமணியன், மாநில செயலாளர் பாலையன் மற்றும் பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்

Tags : AIDUC ,Consumer Affairs Corporation ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்