×

ரைக்குடி- திருவாரூர் இடையே 6 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் டெமு ரயில் இயக்க ரயில்வே புது திட்டம் பயன் தராது என்பதால் பயணிகள் எதிர்ப்பு

பட்டுக்கோட்டை, மே 14: காரைக்குடி - திருவாரூர் அகல பாதையில் 6 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் டெமு ரயில் இயக்க தென்னக ரயில்வே புதுத்திட்டம் வகுத்துள்ளது. இது யாருக்கும் பயன்தராது என்பதால் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகி–்ன்றனர். 1902ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி முதல்முறையாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு மீட்டர்கேஜ் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அன்று முதல் பட்டுக்கோட்டை சென்னை மாநகராட்சியுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டது. 110 ஆண்டுகள் ஓடிய பயணிகள் ரயிலால் பயணிகள் பயனடைந்து வந்தனர். இதுதவிர இவ்வழித்தடத்தில் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு  கம்பன் எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இந்த வழித்தடம் மிகவும் பழமைவாய்ந்த அதாவது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட வழித்தடமாகும். காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை 18 ரயில் நிலையங்கள் இருந்தது. இதில் காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய 3ம் சந்திப்பு  நிலையங்களாகும். காரைக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு காரைக்குடியிலிருந்து மயிலாடுதுறை வரை பட்டுக்கோட்டை வழியாக ரயில் இயங்கி வந்தது.
தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வந்த இந்த ரயில் வழித்தடம் மீட்டர்கேஜிலிருந்து அகல ரயில் பாதைக்காக தமிழ்நாட்டில் கடைசியாக பிரிக்கப்பட்ட ரயில் வழித்தடமாகும். காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை 148 கி.மீ தூரம் அகல ரயில் பாதை பணிக்காக ரூ.1500 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டது. முதல்கட்டமாக காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை 75 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிக்காக ரூ.750 கோடி மதிப்பீட்டில் துவங்குவதற்காக இந்த வழித்தடத்தில் ஓடிய அனைத்து ரயில்களும் 2012ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி நிறுத்தப்பட்டது.


அதைதொடர்ந்து அகல ரயில்பாதை பணிகள் துவங்கி 6 ஆண்டுகளுக்கு பிறகு முடிவடைந்து கடந்தாண்டு மார்ச் 30ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அதைதொடர்ந்து கேட்கீப்பர்கள் பற்றாக்குறையால் டெமு ரயில் என்ற பெயரில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் 3.30 மணி நேரம் பயணத்தில் ரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த ரயிலும் நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து இரண்டாம் கட்டமாக பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை 73 கிலோ மீட்டர் ரூ.750 கோடியில் அகல ரயில் பாதை பணிகள் துவங்கி முடிக்கப்பட்டு கடந்த மார்ச் 29ம் தேதியன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தி 75 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கலாம் என அனுமதி வழங்கினார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் புதிதாக அமைக்கப்பட்ட பட்டுக்கோட்டை- திருவாரூர் பாதையில் அகல ரயில் பாதையில் ரயில் சேவையை துவங்க ரயில்வே அதிகாரிகளால் தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்கு கடிதம் எழுதப்பட்டது. தேர்தல் ஆணையமும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பங்கேற்க கூடாது. இவர்களின் புகைப்படங்களும் விளம்பரங்களில் இடம் பெறக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் சிறப்பு ரயில் இயக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இன்னும் ரயில் இயக்கப்படவில்லை.


இதற்கு உண்மையான காரணமாக காரைக்குடி- திருவாரூர் வழித்தடத்தில் எந்த ரயில்வே ஸ்டேஷன்களிலும் ஸ்டேஷன் மாஸ்டர்கள், கேட்கீப்பர்கள் இல்லை. தென்னக ரயில்வே அதிகாரிகளால் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள தற்காலிக ஸ்டேஷன் மாஸ்டர்கள் தற்போது பணிபுரியும் ஸ்டேஷனிலிருந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை. கேட்கீப்பர்கள் மட்டும் 74 நபர்கள் தேவைப்படுகின்றனர். ரயில்வே ஊழியர்கள் (ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் கேட்கீப்பர்கள்) பற்றாக்குறையால் ரயில் இயக்கவில்லை. இந்நிலையில் தேர்தல் ஆணைய அனுமதியை தொடர்ந்து தென்னக ரயில்வே அதிகாரிகளால் காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை பட்டுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்குவது, கேட்கீப்பர் பற்றாக்குறை காரணமாக ரயிலின் முன்பக்கம் ஒரு கேட்கீப்பர், பின்பக்கம் ஒரு கேட்கீப்பர் என்ற அடிப்படையில் ரயிலிலேயே பயணம் செய்து ரயில்வே கேட்டுகளை மூடி திறப்பது, பயண நேரம் 6 மணி நேரம் என்றும் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 8.15 மணிக்கு டெமு சிறப்பு ரயில் திருவாரூரில் இருந்து புறப்பட்டு 2.15 மணிக்கு காரைக்குடி சென்று மறுமார்க்கத்தில் 2.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு 8.30 மணிக்கு திருவாரூர் சென்றடையும் விதத்தில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பயணம் 6 மணி நேரம் என்பதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே நிரந்தர ஸ்டேஷன் மாஸ்டர், கேட்கீப்பர்கள் நியமனம் செய்ய வேண்டும். பயண நேரத்தை 3 மணி நேரமாக இருக்க வேண்டும். ரயில் சேவை சிறப்பு- தற்காலிக அடிப்படையில் என்று இல்லாமல் நிரந்தர சேவையாக இருக்க வேண்டும். மேலும் ரயில் சேவை காரைக்குடி - திருவாரூர் என்று இல்லாமல் மயிலாடுதுறை- காரைக்குடி மற்றும் காரைக்குடி - சென்னை, ராமேஸ்வரம்- சென்னை என்ற விதத்தில் பல ரயில்களை இவ்வழித்தடத்தில் இயக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : DMRC ,Rikukudi ,
× RELATED நடவடிக்கையை துரிதப்படுத்த கோரிக்கை...